1.2 லட்சம் உக்ரைனிய குழந்தைகளை திருடிச் சென்ற ரஷ்ய படை! புடின் மீது புது குற்றச்சாட்டு
உக்ரைன் மீதான படையெடுப்பில் இதுவரை கிட்டத்தட்ட 1.2 லட்சம் குழந்தைகள் ரஷ்யாவுக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது புது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரஷ்ய குடும்பங்களுக்கு தத்தெடுப்பதற்காக 121,000 உக்ரேனிய குழந்தைகளை விளாடிமிர் புடின் திருட்டுத்தனமாக கடத்தி சென்றுள்ளார் என்று உக்ரைனின் ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் செர்ஜி கிஸ்லிட்யா (Sergiy Kyslytsya) தெரிவித்துள்ளார்.
மேலும் கடத்தப்பட்ட குழந்தைகள், உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் இருந்து ரஷ்யாவில் 70 மைல் தொலைவில் உள்ள தாகன்ரோக் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டதாக செர்ஜி கிஸ்லிட்சியா கூறினார்.
உக்ரேனிய குழந்தைகளை ரஷ்ய குடும்பங்களில் தத்தெடுப்பதே இதன் நோக்கம் என்று உளவுத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
தகவல்களின்படி, ரஷ்ய வீரர்கள் உக்ரைனில் இருந்து தொலைக்காட்சி பெட்டிகள், ஏர் கண்டிஷனர்களை வீடு புகுந்து சூறையாடியதைப் போலவே குழந்தைகளும் திறம்பட திருடப்படுவதாக கூறப்படுகிறது.
அதேசமயம், புடின் ரஷ்யாவில் அனாதை குழந்தைகளுக்கான தத்தெடுப்பு நடைமுறைகளை முடுக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு உக்ரைனின் 7.5 மில்லியன் குழந்தைகளில் 4.8 மில்லியன் பேர் 6 வாரங்களுக்கு முன்பு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாக ஐநாவின் குழந்தைகள் நிறுவனம் (UNICEF) கூறியது.
யுனிசெப்பின் அவசரகால திட்டங்களின் இயக்குனர் மானுவல் ஃபோன்டைன், குழந்தைகள் ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளைக் கேள்விப்பட்டதாக அவர் கூறினார். மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் கிடைக்கவில்லை, அதை நாங்கள் பார்க்க முயற்சித்து வருவதாகவும் கூறினார்.
இடம்பெயர்ந்த குழந்தைகளில் 2.8 மில்லியன் பேர் உக்ரைனிலும் 2 மில்லியன் மற்ற நாடுகளிலும் உள்ளனர் என்று ஃபோன்டைன் கூறினார்.