கர்ப்பமாக உள்ள நிலையில் வேறு வழியின்றி தாலிபான்களிடம் தஞ்சமடைந்த பிரபல நாட்டை சேர்ந்த ஊடகவியலாளர்!
கர்ப்பமாக உள்ள நியூசிலாந்தை சேர்ந்த பிரபல ஊடகவியலாளருக்கு சொந்த நாட்டில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஆப்கானிஸ்தானில் சென்று தாலிபான்களிடமே தஞ்சம் அடைந்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை கடந்தாண்டு தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர் தாலிபான்கள். அப்போது அவர்கள் நடத்திய முதல் செய்தியாளர் சந்திப்பில், கலந்து கொண்ட ஒரே பெண் ஊடகவியலாளராக இருந்தவர் நியூசிலாந்தை சேர்ந்த சார்லோட் பெலிஸ்.
அந்த சமயத்தில் தாலிபான்களை முகத்துக்கு நேராக துணிச்சலுடன் பெண்களுக்கு எதிரான அநீதிகளை எதிர்த்து குரல் எழுப்பியவர் இவர். இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பரில் இவர் கட்டாருக்கு சென்றார்.
அந்த நேரத்தில் தான் அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. கட்டாரில் திருமணம் கடந்த உறவு சட்டவிரோதம் ஆகும். திருமணமாகாத நிலையில் அவர் கர்ப்பமானதால், சார்லோட் தனது சொந்த நாடான நியூசிலாந்துக்கு செல்ல வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டார்.
அவர் பெல்ஜியத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் உறவில் இருந்து வருகிறார். நியூசிலாந்து செல்வதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டார். இருப்பினும் நியூசிலாந்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் கொரோனா விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, விசா கிடைப்பது தாமதமானது.
இதனையடுத்து வேறு வழியில்லாமல் தனது ஆண் நண்பருடன் அவரின் சொந்த நாடான பெல்ஜியத்துக்கு சென்றுள்ளார். இருப்பினும் அவர்களால் அங்கு நீண்டகாலம் தங்கியிருக்க முடியவில்லை. அங்கிருந்து மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே திரும்பியுள்ளார். அங்கு தாலிபான்கள் ஆதரவையும் அவர் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில், தன்னை அனுமதிக்க மறுத்த சொந்த நாடான நியூசிலாந்து மீது சார்லோட் விமர்சனம் வைத்துள்ளார். இது குறித்த அவரின் திறந்த மடலில், கர்ப்பிணியான தான் சொந்த் நாட்டுக்கு திரும்ப அவசர அனுமதி கேட்ட நிலையில், கொரோனா நெறிமுறைகளை காரணம் காட்டி அதனை மறுத்துவிட்டனர்.
தான் 59 ஆவணங்களை அளித்தபோதிலும் தனக்கு அனுமதி கிடைக்கவில்லை. மே மாதத்தில் பெண் குழந்தையை பெற்றெடுக்க இருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானில் குழந்தை பெற்றுக்கொள்வது மரண தண்டனைக்கு சமமாக இருக்கும். ஏனெனில் அந்நாட்டின் சுகாதாரத்துறை மோசமாக உள்ளது என தெரிவித்தார்.
இது குறித்த நியூசிலாந்து விளக்கம்: நியூசிலாந்து வருபவர்கள் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஹொட்டல்களில் 12 நாட்கள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும். எனவே தான் காலதாமதம் ஏற்படுகிறது. நிராகரிப்பு நிலையில் இருந்து பரிசீலனை நிலைக்கு சார்லோட்டின் விண்ணப்பம் வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.