NHS 111 சேவை... எப்போது பயன்படுத்தலாம்: விரிவான விளக்கம்
மருத்துவ அவசர தருணங்களில் நோயாளிகள் மருத்துவரை அணுக முடியாத கட்டத்தில் NHS 111 சேவையின் பயன்பாடு பேருதவியாக இருக்கும்.
NHS 111 சேவை
பிரித்தானிய மக்கள் பெரும்பாலோருக்கு NHS 111 சேவை தொடர்பில் போதுமான தெளிவில்லை அல்லது எப்போது NHS 111 சேவையைப் பயன்படுத்திக்கொள்வது என்பது தெரிந்திருக்கவில்லை.

உயிருக்கு ஆபத்தானதாக இல்லாத அவசர மருத்துவ உதவி தேவைப்படும் சமயங்களில் NHS 111 சேவை பக்கபலமாக இருக்கும். NHS 111 சேவையானது முற்றிலும் இலவசம் என்பதுடன், வாரத்தின் 7 நாட்களும், நாளுக்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடியது.
இதனால், அவசர மருத்துவ உதவி தேவைப்படும் சமயங்களில் NHS 111 சேவையை நாடலாம். மருத்துவ உதவி தேவைப்படும் வேளையில், பொது மருத்துவரை அணுக முடியாமல் போனால், உடனடியாக NHS 111 சேவையைத் தொடர்பு கொள்ளலாம்.
உளவியல் ரீதியான ஆலோசனைகள் தேவையாக இருப்பினும், அல்லது உளவியல் ரீதியாக எவரேனும் ஆபத்து கட்டத்தில் இருந்தாலும், NHS 111 சேவை உடனடியாக உதவ முன்வரும்.
இக்கட்டான கட்டத்தில், உங்கள் அலைபேசியில் இருந்து 111 இலக்கத்திற்கு அழைப்பு விடுக்கலாம், அல்லது இணையத்தில் 111.nhs.uk என தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் அலைபேசியில் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ள NHS செயலியைப் பயன்படுத்தலாம்.
இதில், உங்கள் மொழியில் உதவி கோரவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. நோய் அறிகுறிகள் குறித்து உங்களிடம் கேள்விகள் கேட்கப்படும், அல்லது நீங்கள் வேறு யாருக்காவது சேவையைப் பயன்படுத்தினால், அவர்கள் சார்பாக நீங்கள் பதிலளிக்கலாம்.
சரியான முடிவெடுக்க
உங்கள் நிலைமையை தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்ற நடவடிக்கையை NHS 111 சேவை முன்னெடுக்கும். உங்கள் பிரச்சனைக்கு ஏற்றவாறு, மருத்துவரை நாடவும், உள்ளூர் மருந்தகத்திற்கு செல்லவும், அல்லது அவசர பல் சிகிச்சையை நாடவும், அல்லது அவசர உதவி மையத்தை நாடவும் NHS 111 சேவை பரிந்துரைக்கும்.

தேவைப்பட்டால், அவர்கள் ஒரு செவிலியர், மருத்துவர் அல்லது துணை மருத்துவரிடமிருந்து திரும்ப அழைப்பை ஏற்பாடு செய்யலாம். இவை அனைத்தும் நீங்கள் தொழில்முறை மருத்துவ ஆலோசனையைப் பெறுகிறீர்கள் என்பதையும், உதவிக்காக தவறான இடத்திற்குச் சென்று விலைமதிப்பற்ற நேரத்தை வீணாக்காமல் இருப்பதையும் உறுதி செய்கிறது.
உங்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால், எங்கு செல்வது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், சரியான முடிவெடுக்க NHS 111 சேவையை தொடர்பு கொள்ளவும். அழைக்கவும் அல்லது ஒன்லைனில் உதவி நாடவும் அல்லது NHS செயலியைப் பயன்படுத்தவும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |