ராஜீவ்காந்தி இறந்த அன்று கருணாநிதியின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது ஏன்? அமைச்சர் நிர்மல் குமார்
ராஜீவ்காந்தி இறந்த அன்று கருணாநிதியின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது ஏன்? இப்போதும் ஜெயின் கமிஷனில் அந்தக் கேள்வி இருக்கிறது என அமைச்சர் நிர்மல் குமார் பேசியுள்ளார்.
விஜய் கரூர் பயணம்
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
நேற்று கரூருக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய், அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசிய போது, "கரூர் போலீசே எங்களை கூட்டிட்டு வந்த அந்த நாடகத்தை முழுசா நம்பிட்டேன். இதுக்கெல்லாம் யார் காரணம்?

இதெல்லாம் யார் சொல்லி செஞ்சது? இப்படி நடந்திருச்சேனு அந்த வேதனையோடு, வீட்டில இருந்த என்ன, ஓடி ஒளிஞ்சிட்டானு சொல்றீங்களா, என் மேல பழிய தூக்கி போடுவீங்களா" என பேசினார்.

மேலும், உயிரிழந்த குடும்பங்களை சேர்ந்த 32 பேருக்கு அரசுப்பணிக்கான ஆணையை வழங்கினார். அரசுப்பணி வழங்கப்பட்டதற்கும், முதல்வர் விஜய்யின் பேச்சுக்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
கருணாநிதியின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது ஏன்?
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "கரூர் சம்பவத்தின்போது எஸ்.பி.க்கே தெரியாத விஷயம் உடனடியாக செந்தில் பாலாஜிக்கு எப்படி தெரிந்தது? அரசு மருத்துவமனைக்கு பக்கத்திலேயே ரூம் போட்டு காத்துக்கொண்டிருந்தாரா? எப்படி உடனடியாக 5 நிமிடத்தில் அங்கு வந்தார்?

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இறந்தபோது, அன்றைய தினத்தில் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற இருந்த திமுக தலைவர் கருணாநிதியின் கூட்டம் எதற்காக ரத்து செய்யப்பட்டது? இப்போதும் ஜெயின் கமிஷனில் அந்தக் கேள்வி இருக்கிறது இதேபோன்று விடைதெரியாத நிறைய கேள்விகள் திமுக மீது இருக்கின்றன.
அதேபோல, கரூர் சம்பவமும் விடை தெரியாத கேள்வியாக இருக்கும். மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு தெரிந்தால்போதும்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |