10வது முறை பீகார் முதல்வர் ஆகும் நிதிஷ் குமார்? - ஆனால் 30 வருடங்களாக தேர்தலில் போட்டி இல்லை
10வது முறை பீகார் முதல்வராவார் என எதிர்பார்க்கப்படும் நிதிஷ் குமார், கடந்த 30 வருடங்களாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.
பீகார் தேர்தல் முடிவுகள்
பீகாரில் உள்ள 243 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

பாஜக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சிராஜ் பஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் உள்ளடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 201 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ், தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளடங்கிய I.N.D.I.A. கூட்டணி வெறும் 36 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சூராஜ் கட்சி, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
10வது முறை முதல்வர் ஆகும் நிதிஷ்?
இந்நிலையில், 10 வது முறையாக நிதிஷ் குமார் முதல்வர் ஆக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், ஐக்கிய ஜனதா தளம் 80 தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில், பாஜக 90 இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் பாஜகவை சேர்ந்த ஒருவர் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வியும் உள்ளது.
30 வருடங்களாக தேர்தலில் போட்டியிடாத நிதிஷ்
2000 ஆம் ஆண்டு முதல் இதுவரை 9 முறை பீகார் முதல்வராக பதவி வகித்துள்ள நிதிஷ் குமார், பீகாரில் அதிக காலம் முதல்வர் பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஆனால், 1995 பிறகு அவர் ஒருமுறை கூட சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. தற்போதையை தேர்தலிலும் போட்டியிடவில்லை.
2006 ஆம் ஆண்டு முதல் பீகார் சட்டமேலவை உறுப்பினராக இருந்து கொண்டே பீகாரின் நீண்ட கால முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |