பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் அனுப்பவில்லை! சீனா மறுப்பு
பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் அனுப்பியதாக வெளியான செய்திக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.
சீனா திட்டவட்ட மறுப்பு
சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்களுடன் சரக்கு விமானம் சென்றதாக வெளியான செய்தியை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இத்தகவலை தெரிவித்துள்ளது.
சீனா வெளியிட்ட அறிக்கை
அந்த அறிக்கையில், "சீன ராணுவம் தனது மிகப் பெரிய ராணுவ சரக்கு விமானத்தின் மூலம் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
மேலும், மக்கள் விடுதலை ராணுவ விமானப்படையின் சியான் Y-20 ராணுவ போக்குவரத்து விமானம் பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்களை கொண்டு சென்றதாக கூறப்படும் செய்தியும் பொய்யானது" என்று திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.
மேலும், சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், "இத்தகைய ஆதாரமற்ற செய்திகளை பரப்புவது சட்டத்திற்குப் புறம்பானது. இணையம் சட்டத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது அல்ல.
ராணுவம் தொடர்பான தவறான தகவல்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்கள் சட்டப்படி கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்திய வதந்தி
முன்னதாக, இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைகளுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ ரீதியாக பலவீனமடைந்துள்ளதாகவும், இதனால் அந்நாடு அவசரமாக ராணுவ தளவாடங்களை பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா ராணுவ உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும், அதன் காரணமாகவே ராணுவ தளவாடங்கள் அனுப்பப்பட்டதாகவும் பல்வேறு ஊடகங்களில் செய்திகள் பரவின.
இந்நிலையில், சீனா இந்த செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |