பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்காத தமிழக ஆளுநர்! கெடு முடிந்ததால் உச்சநீதிமன்றம் முக்கிய முடிவு
பேரறிவாளன் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் வரும் 9ஆம் திகதி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் உள்ளனர்.
இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் சட்ட நிபுணர்களின் ஆலோசனையை கேட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முடிவு எடுக்காமல் உள்ளார்.
தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது 21ஆம் திகதிக்குள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்ட நிலையிலும் அவர் முடிவு எடுக்கவில்லை.
இதையடுத்து கெடு முடிந்ததால் 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை வரும் 9ம் திகதி விசாரணைக்காக உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.