சசிகலா மீது எந்த சந்தேகமும் இல்லை! கடைசி நேரத்தில் திடீரென அந்தர் பல்டி அடித்த அதிமுக அமைச்சர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது, சசிகலா மீது எந்த சந்தேகமும் இல்லை என்று அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். பெங்களூரு சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா, தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் இருந்து தற்போது ஒதுங்கியுள்ளார்.
அவரின் இந்த முடிவின் பின்னணியில் பெரிய திட்டமே இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சசிகலாவை விமர்சித்து வந்த அதிமுகவினர் சிலர் இப்போது சசிகலா மீது எந்த குறையும் இல்லாதது போல் பேசி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டது. இதனால் சசிகலா நிச்சயம் அதிமுக-வில் இணைவது உறுதி என்று கூறப்படுகிறது.
கோவில் பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜு அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அமமுக சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இதனால் இங்கு நிச்சயம் ஒரு போட்டி நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடம்பூர் ராஜு, ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது யாரும் சந்தேகப்படவில்லை. ஜெயலலிதா உடல்நிலை குறைவு ஏற்பட்டு இயற்கையாகவே உயிரிழந்தார்
. விமர்சனங்கள் வந்ததால் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதால் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா உடனிருந்து கவனித்துக் கொண்டார்.
இயற்கையை யாராலும் வெல்ல முடியாது என்பதால் ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதாக கூறியுள்ளார்.