7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை! சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தகவல்
7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடமிருந்து எந்த தகவலும் தமிழக அரசுக்கு நேரடியாக வரவில்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பது குறித்து, அரசியல் சாசனத்தின் 161வது பிரிவின் கீழ் தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று 2018ம் ஆண்டு செப்டம்பர் 6ம் திகதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, 2018ம் ஆண்டு செப்டம்பர் 9ம் திகதியன்று, சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.
தமிழக அரசு சார்பில் அன்றைய தினமே 7 பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதனிடையே, தன்னை முன் கூட்டியே விடுதலை கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்
இந்த வழக்கு தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் , எழுவர் விடுதலை குறித்த முடிவை ஆளுநர் விரைவில் அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
எனினும், இரண்டாண்டுகள் காலம் தாழ்த்திய ஆளுநர், தற்போது ஏழு பேரை விடுவிக்கும் விவகாரத்தில் ஜனாதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்த முடிவை உச்ச நீதிமன்றத்திலும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே பேரறிவாளன் தன்னை முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு வரும் 9ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடமிருந்து எந்த தகவலும் தமிழக அரசுக்கு நேரடியாக வரவில்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
மேலும், உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தாக்கல் செய்த ஆவணம் அரசுக்கு தந்தால் அதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.