அமெரிக்கா இல்லாவிட்டால், இஸ்ரேல் என்ற நாடே இல்லை... கொந்தளித்த ட்ரம்ப்
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான பகிரங்க கருத்து வேறுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தனது ஆதரவு இல்லாவிட்டால் இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இஸ்ரேல் அழிந்திருக்கும்
G7 உச்சிமாநாட்டில் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியுடன் இணைந்து பேசியபோது கூறிய ட்ரம்ப், அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் இஸ்ரேல் இல்லை. தாம் இல்லாமல் இஸ்ரேல் இருந்திருக்காது, ஏனென்றால் தாம் செய்ததைச் செய்ய வேறு எந்த அமெரிக்க ஜனாதிபதியும் முன்வரவில்லை.

தாம் தலையிடாமல் இருந்திருந்தால், இஸ்ரேல் எப்போதோ அழிந்திருக்கும் என தெரிவித்துள்ளார். ஈரானுடனான அமைதி ஒப்பந்த முயற்சிகளைப் பாதிக்கக்கூடிய வகையில் அமையக்கூடிய லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து, நெதன்யாகுவை மிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு ட்ரம்ப் வலியுறுத்திய நிலையில் இந்தக் கருத்துகள் வெளியாகின.
நெதன்யாகுவுடன் தனக்கு இன்னும் வலுவான உறவு இருப்பதாகக் கூறிய ட்ரம்ப், அதேவேளையில் அவர் கூடுதல் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.
லெபனான் ஒரு காலத்தில் மிகச் சிறந்த நாடாகத் திகழ்ந்தது. அங்கு பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் சட்டத்தரணிகள் போன்ற அறிவார்ந்த சமூகம் இருந்தது; சிறந்த அறிவுத்திறன் கொண்டவர்கள் அங்கு வாழ்ந்தனர்.
ஆனால் தற்போது நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்படவிருக்கும் நிலையில், பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதால் ட்ரம்ப் நெதன்யாகு மீது கோபமடைந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து இந்தக் கருத்துகள் வெளியாகின.

தவறாக முடிவெடுத்தார்
ஆனால், லெபனான் தலைநகரில் உள்ள ஹிஸ்புல்லா தளம் ஒன்றை குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளக் கூடாது என்று முன்னதாக ஒப்புக்கொண்டிருந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து தனது ஆலோசகர்கள் தெரிவித்தபோது ஆச்சரியமடைந்ததாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
மட்டுமின்றி, ஈரான் விவகாரத்தில் நெதன்யாகு தவறாக முடிவெடுத்தார் என்றும் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். இதற்கிடையில், அமெரிக்காவுடனான எந்தவொரு ஒப்பந்தத்திற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட லெபனானின் சில பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டியது அவசியமாகும் என்று ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.

மேலும், இந்தப் போரின்போது ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறாத வரை, போர் முழுமையாக முடிவுக்கு வரவில்லை என்றே கருதப்படும் எனவும் அராக்சி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மட்டுமின்றி, தேவைப்படும் காலம் வரை இஸ்ரேல் லெபனானில் தொடர்ந்து நீடிக்கும் என்றும் நெதன்யாகு கூறியுள்ளார். லெபனான் மட்டுமின்றி, காஸா மற்றும் சிரியா தொடர்பிலும் தங்களின் நிலைப்பாடில் மாற்றமில்லை என்றே நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |