அமெரிக்கா முழுவதும் வெடித்த No Kings போராட்டம்... முழுமையான பின்னணி
தலைநகர் வாஷிங்டனில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இராணுவ அணிவகுப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, அவருக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்ள அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
தம்மை ஒரு மன்னராகவே
No Kings என்ற குழு ஒன்று ஒருங்கிணைத்துள்ள இந்த ஆர்ப்பாட்டமானது ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டமாக முன்னெடுக்கப்படுகிறது.
நியூயார்க், பிலடெல்பியா மற்றும் ஹூஸ்டன் போன்ற நகரங்களில் அரசியல்வாதிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கூட்டத்தினரிடையே உரைகளை வழங்க உள்ளனர்.
சனிக்கிழமை மாலை திட்டமிடப்பட்ட இந்த இராணுவ அணிவகுப்பானது, அமெரிக்க இராணுவத்தின் 250 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் முன்னெடுக்கப்பட உள்ளது. ஆனால் சனிக்கிழமை தமது பிறந்தநாளையும் ட்ரம்ப் கொண்டாடவிருக்கிறார்.
இராணுவ அணிவகுப்பை சீர்குலைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தீவிர நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ட்ரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். சில அரசியல்வாதிகளும் முன்னாள் இராணுவத் தலைவர்களும் ட்ரம்பின் இந்த நிகழ்வை அரசியல் ஆதாயத்திற்காக அமெரிக்க இராணுவத்தை பயன்படுத்துவதாக விமர்சித்துள்ளனர்.
இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தம்மை ஒரு மன்னராகவே ட்ரம்ப் பாவிப்பதால், அவரை விமர்சிக்கும் வகையிலேயே No Kings என தங்களுக்கு பெயர் சூட்டிக்கொண்டதாக போராட்டங்களை ஒருங்கிணைக்கும் குழு அறிவித்துள்ளது.
நடைமுறைகளை மீறியதாக
பல்வேறு நிர்வாக ஆணைகள், பெடரல் ஊழியர்களை கொத்தாக வேலையில் இருந்து நீக்கியது, பல ஆயிரம் மக்களை நாடுகடத்தியது உள்ளிட்ட ட்ரம்பின் நடவடிக்கைகள் நூற்றுக்கணக்கான வழக்குகளைச் சந்திக்க வைத்துள்ளது.
மட்டுமின்றி, ட்ரம்பின் நிர்வாகம் அமெரிக்க அரசியலமைப்பு மற்றும் பல்வேறு சட்டங்கள் மற்றும் நடைமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியில் கலந்துகொள்வதற்கான காரணங்களாக குடியேற்றம் மற்றும் பெடரல் அரசாங்கத்தின் செயல்திறன் போன்ற தீவிரமானப் பிரச்சினைகளை குறிப்பிட்டனர்.
ட்ரம்ப் முன்னெடுக்கும் இராணுவ அணிவகுப்பில் கிட்டத்தட்ட 6,200 வீரர்கள் அணிவகுத்துச் செல்வார்கள், அவர்களுடன் 128 இராணுவ வாகனங்களும் - 60 டன் எடையுள்ள M1 ஆப்ராம்ஸ் டாங்கிகள் உட்பட - 62 விமானங்களும் இணைகின்றன.
மட்டுமின்றி, பாராசூட் சாகச நிகழ்ச்சி, லீ கிரீன்வுட் தலைமையிலான இசை நிகழ்ச்சி மற்றும் வாணவேடிக்கைகள் உள்ளிட்டவையும் திட்டமிடப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |