எந்த சின்னம் கொடுத்தாலும் வெற்றி பெறுவோம்.., கடைசியில் சீமான் எடுத்த முடிவு
சின்னம் இழுபறியில் இருக்கும் நிலையில் எந்த சின்னம் கொடுத்தாலும் வெல்வோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சின்னம்
வரும் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்குவதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்தார்.
ஆனால் மனுவை விசாரித்த நீதிபதி கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது தன்னிச்சையோ அல்லது அரசியலமைப்புக்கு முரணானதோ இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
பின்பு, உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பு முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஏப்ரல் 1-ந் தேதிக்குள் நாம் தமிழர் கட்சியின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டது.
சீமான் பேட்டி
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னத்தை கொடுத்தாலும் எங்களுக்கு பிரச்சனையில்லை. நாங்கள் வெற்றி பெறுவோம்.
எங்களது சின்னத்தை வேறொரு கட்சிக்கு கொடுத்துவிட்டார்கள். அதற்கு மாற்றாக விவசாயத்தை முன்வைத்து சின்னம் கேட்டால் அதையும் வேறு ஒருவருக்கு கொடுத்து விடுகிறார்கள்" என்றார்.