தமிழ்நாட்டில் அறிமுகமான தானியங்கி சுங்கச்சாவடி - வாகனங்கள் நிற்க வேண்டியதில்லை
no more stopping at paranur toll plaza: தமிழ்நாட்டில் முதல்முறையாக பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நிற்காமல், தானியங்கி முறையில் இயங்கும் தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை (MLFF) நடைமுறைக்கு வந்துள்ளது.
பரனூர் சுங்கச்சாவடி
வழக்கமாக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் குறிப்பிட்ட தடத்தில் சென்று, ஃபாஸ்டேக் கணக்கை சரிபார்த்து பணத்தை எடுக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

குறிப்பாக வார இறுதி நாட்கள், பண்டிகைக் காலங்களில் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்படும்.
தற்போது வாகனங்கள் நிற்காமல் செல்லும் வகையில், தானியங்கி சுங்கச்சாவடியாக மாற்றப்பட்டுள்ளது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடி எப்போதும் மிகவும் பரபரப்பாக இயங்கும் சுங்கச்சாவடி ஆகும். இங்கு நாளொன்றுக்கு சுமார் 46,500 வாகனங்கள் வந்து செல்கின்றன.
அக்டோபர் 1 ஆம் திகதி முதல் இந்த சாவடியில் வாகனங்கள் நிற்க வேண்டியதில்லை.
MLFF எப்படி செயல்படும்?
அதாவது, முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை (MLFF) இந்த சுங்கச்சாவடியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

RFID ரீடர்கள், ரேடார் ஸ்கேனர்கள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ANPR கேமராக்கள்பொருத்தப்பட்ட உயரமான கேன்ட்ரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள உயர்தர கேமராக்கள் வாகனத்தின் எண்களையும், ஃபாஸ்டேக் கணக்கையும் நொடியில் படித்து, அதற்கேற்ப கட்டணத்தை வங்கிக் கணக்கில் பிடித்தம் செய்து கொள்ளும்.
பாஸ்டேக் இல்லாமலோ அல்லது போதுமான பேலன்ஸ் இல்லாமலோ சென்றால், அவர்களுக்கு அபராதச் சலான் அனுப்பப்படும்.
ஃபாஸ்டேக் வேலை செய்யாத பட்சத்தில், இந்த கேமராக்கள் வாகன எண்களைப் புகைப்படமாக எடுத்து மாற்று வழியில் கட்டணம் வசூலிக்க உதவம்.
தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்த பரனூர் சுங்கச்சாவடியில் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறை படிப்படியாக மற்ற சுங்கச்சாவடிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஏற்கனவே குஜராத், டெல்லி, ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.