கட்சிக்காக வேலையை ராஜினாமா செய்த Deputy Collector.., MP சீட் இல்லை என்றதால் மீண்டும் வேலை கேட்டு கோரிக்கை
அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் சேர்ந்த அதிகாரிக்கு தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் மீண்டும் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
அரசு வேலை ராஜினாமா
இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், லவ்குஷ் நகரில் வசித்து வருபவர் நிஷா பாங்ரே. இவர், சத்தார்பூர் மாவட்டத்தில் துணை ஆட்சியராக (சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட்) வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு, கடந்த 2023 -ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதால் தனது அரசு பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் மக்களவை தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினர். ஆனால், வரும் மக்களவை தேர்தலிலும் வாய்ப்பு கொடுக்காமல் செய்தித் தொடர்பாளர் பதவியை நிஷா பாங்ராவுக்கு காங்கிரஸ் மேலிடம் வழங்கியுள்ளது.
அவர் கூறியது
இதுதொடர்பாக நிஷா பாங்ரா கூறுகையில், "சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பு தருவோம் என்று கூறிய காங்கிரசினர் தரவில்லை. பின்பு, மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு தருவோம் என்று கூறி அந்த வாய்ப்பையும் வழங்கவில்லை.
கடந்த மாதம் 27-ம் திகதி எனக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பதவியை வழங்கினார்கள். அதில் நான் இணையவில்லை.
நான் மீண்டும் அரசு பணியில் இணைய விரும்புகிறேன். அதற்காக துணை ஆட்சியர் பணியில் சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளேன்.
நான் பதவியில் இருந்த போது புத்த மத மாநாட்டில் பங்கேற்க அரசு சார்பில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், நான் பதவியில் இருந்து விலகினேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |