பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம்
காஸா பகுதியை மொத்தமாக அமெரிக்க கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் இனி பாலஸ்தீன மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை என ஜனாதிபதி ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உரிமை இல்லை
காஸாவில் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், பாலஸ்தீன மக்களுக்கு உரிமை இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில், காஸாவை தாம் மொத்தமாக சொந்தமாக்கிக் கொள்வேன் என்றும், காஸாவிற்கு வெளியே பாலஸ்தீனிய மக்கள் வாழ்வதற்கு ஆறு வெவ்வேறு இடங்கள் தெரிவு செய்து அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், காஸா தொடர்பாக சமீப நாட்களில் ட்ரம்பின் கருத்துக்கள் மற்றும் அவரது திட்டத்தை அரேபிய நாடுகள் அனைத்தும் புறந்தள்ளி வருகிறது. காஸாவில் இதுவரை குடியிருந்து வந்த மக்களுக்கு வேறு பகுதிகளில் குடியிருக்க வசதி செய்து தரப்படும் என்றும், அவர்கள் இனி காஸா திரும்ப முடியாது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
காஸா தற்போது மக்கள் குடியிருக்கத் தகுதியான இடமாக இல்லை. இந்த சூழலில் அவர்கள் காஸா திரும்பினால், வளர்ச்சிப்பணிகளுக்கு இடையூறாக மாறும். அதனால் அவர்களுக்கு புதிய குடியிருப்பு வசதிகள் செய்து தரப்படும். அத்துடன் அவர்கள் இனி காஸாவுக்கு திரும்பும் உரிமையும் மறுக்கப்படும் என்றார்.
கடும் எதிர்ப்பு
கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போதே காஸா திட்டம் தொடர்பில் முதல் முறையாக கருத்து தெரிவித்து உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தார்.
ட்ரம்பின் கருத்துக்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். காஸாவில் இருந்து வெளியேற்றப்படும் மக்களை எகிப்தும் ஜோர்தானும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தினார்.
தற்போது ட்ரம்ப் தெரிவிக்கையில், காஸாவில் வசிக்கும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களுக்கு அழகான குடியிருப்புகளை உருவாக்குவேன், அது காஸாவில் இருந்து கொஞ்சம் வெளியே அமையலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |