உணவு பற்றாக்குறையை தீர்க்க உக்ரைன் ரஷ்யா இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை: அன்டோனியோ குட்டரெஸ் கருத்து
போரை நிறுத்திவிட்டு உணவு ஏற்றுமதியில் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளும் இணையாவிட்டால் உலகின் உணவு தானிய தட்டுப்பாட்டை தவிர்க்க முடியாது என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
உலகின் உணவு தானிய ஏற்றுமதியில் மிக முக்கிய நாடுகளாக திகழும் உக்ரைன் மற்றும் ரஷ்யா தற்போது தீவிரமான போர் தாக்குதல்களில் 100வது நாளாக தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர், இதனால் உலகளவில் கடுமையான உணவு தானிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளும் சர்வதேச உணவு சந்தைக்கு திரும்பாத வரை, உலகின் உணவு தானிய தட்டுப்பாட்டை கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது என தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரஷ்யாவின் போர் நடவடிக்கை உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டில் அத்துமீறும் செயல் மற்றும் ஐக்கிய நாடுகளின் சாசனத்தை அத்துமீறும் செயல் என தெரிவித்தார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை, உணவு, ஏரிப்பொருள் மற்றும் பொருளாதாரம் என முப்பரிமாண நெருக்கடியை உலகளவில் ஏற்படுத்தியுள்ளது, மேலும் இது பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள், நாடு, மற்றும் பொருளாதாரத்தை அடி ஆழத்திற்குள் தள்ளுகிறது எனவும் குட்டரெஸ் தெரிவித்தார்.
அன்டோனியோ குட்டரெஸ், உலகின் உணவு தானிய தட்டுப்பாட்டை குறைப்பதற்காக ரஷ்யா, துருக்கி மற்றும் உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: சீனாவுடனான போருக்கு தயாராகும் தைவான்: துப்பாக்கிகளுடன் பயிற்சியில் குவித்த பொதுமக்கள்!
உலகின் உணவு தட்டுப்பாடு குறித்த பல்வேறு நாட்டு தலைவர்களும் ரஷ்யாவிற்கு கோரிக்கை முன்வைத்து வரும் இந்த வேளையில், உக்ரைனில் இருந்து உணவு தானியங்களை விடுவிக்க வேண்டும் என்றால் ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி நிபந்தனை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.