புடின் அளித்த 10 பில்லியன் பவுண்டுகள்... வட கொரியாவில் மூளைச்சலவை செய்யப்படும் உக்ரைன் சிறார்கள்
North Korea’s camps for snatched Ukrainian children: கடத்தப்பட்ட உக்ரேனியக் குழந்தைகளுக்கான வட கொரியாவின் முகாம்கள்.
விளாடிமிர் புடினிடமிருந்து 9.7 பில்லியன் பவுண்டுகளைப் பெற்றுக்கொண்டு, கடத்தப்பட்ட உக்ரேனியக் குழந்தைகளுக்கான முகாம்களை அமைக்க உதவியதாக கிம் ஜோங்-உன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியா தடை
ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனைச் சேர்ந்த குழந்தைகள், விடியற்காலையில் கிம் வம்சத்தின் சிலைகளைச் சுத்தம் செய்வதற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அழிப்பது பற்றிய கடுமையான உரைகளைக் கேட்பதற்கும் 4,000 மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ள வட கொரியாவிற்கு அனுப்பப்பட்டதைப் பற்றிய திகில் கதைகளைக் கூறியுள்ளனர்.

வட கொரியாவில் உள்ள ஒரு கொடூரமான முகாம் மீது பிரித்தானியா அண்மையில் தடைகளை விதித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புடின் பணத்தை வழங்கி, கடத்தப்பட்ட சிறுவர்களை 'மறு கல்வி' என்ற போர்வையில் அங்கு அனுப்பி வைப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள சோங்டோவோன் சர்வதேசக் குழந்தைகள் முகாம், உக்ரேனியக் குழந்தைகளை ரஷ்ய கலாச்சாரத்துடன் கட்டாயப்படுத்தி ஒன்றிணைக்கும் ரஷ்யாவின் திட்டத்திற்கு உதவுவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த முகாம், ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன், ரஷ்யா, பெலாரஸ் மற்றும் வடகொரியா ஆகிய பகுதிகளில் புடின் அமைத்துள்ளதாகக் கூறப்படும் 165 மறுகல்வி மையங்களின் வலையமைப்பில், மிகவும் தொலைதூரத்திலுள்ள ஒரு இடத்தில் செயல்படுகிறது.
2022-ல் புடின் முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, 20,500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இத்தகைய முகாம்களுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் அல்லது கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் கூறுகிறது.
மோதலின் தொடக்கத்தில் ரஷ்ய வீரர்கள் உக்ரைன் முழுவதும் தீவிரமாக முன்னேறிச் சென்றபோது, பலர் அனாதை இல்லங்களிலிருந்தும் அல்லது தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டிருந்தனர்.
மார்ச் 2023-ல் இடம்பெற்ற நாடுகடத்தல்கள் தொடர்பாக, புடின் மற்றும் அவரது குழந்தைகள் நல ஆணையர் மரியா லவோவா-பெலோவா ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைதாணைகளைப் பிறப்பித்துள்ளது.
கிட்டத்தட்ட 10 பில்லியன்
இந்தக் கொடுமையான அரசு முகாம்களில் சிக்கியுள்ள குழந்தைகள், தங்களைக் கைது செய்தவர்களால் மூளைச்சலவை செய்யப்படும் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். இப்படியான முகாம் அமைக்கப்பட்டுள்ளதால், வட கொரியா பல பில்லியன் பவுண்டுகள் நிதியுதவிகளைப் பெற்று வருகிறது.

கடந்த மாதம், ஐரோப்பிய ஒன்றியமும் அதைப் பின்பற்றி, அந்த முகாமுடன் சேர்த்து 10 தனிநபர்கள் மற்றும் 16 பிற அமைப்புகளுக்கும் தடை விதித்தது.
இப்படியான நடவடிக்கைகளால் கிம் ஜோங் உன் கிட்டத்தட்ட 10 பில்லியன் பவுண்டுகளை ஈட்டியுள்ளார் என தென் கொரிய உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது.
அதில் 448 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான தொகையானது, ரஷ்யாவிற்காகப் போரிட்டு மடிவதற்காகத் தனது சொந்த வீரர்களைப் போர்க்களத்திற்கு அனுப்புவதற்கு கிம் வசூலிக்கும் கட்டணமாகக் கூறப்படுகிறது.

தம்மை ஆதரிக்கும் வட கொரியாவிற்கு புடின் ரொக்கப் பணம், எரிபொருள் மற்றும் இராணுவத் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொடுத்து உதவி வருகிறார். பதிலுக்கு, பீரங்கிக் குண்டுகள், ராக்கெட்டுகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆயிரக்கணக்கான துருப்புக்களை ரஷ்யா பெற்றுள்ளது.
2024-ஆம் ஆண்டு முதல் கிம் சுமார் 15,000 துருப்புகளை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளார் என்று ஜெலென்ஸ்கி கூறுகிறார். தென் கொரிய உளவுத்துறை தகவல்களின்படி, இந்த ஆண்டு பிப்ரவரி மாத நிலவரப்படி, சுமார் 6,000 வட கொரிய வீரர்கள் கொல்லப்பட்டிருந்தனர் அல்லது காயமடைந்திருந்தனர்.
இதனிடையே, புடின் கூடுதலாக 50,000 துருப்புக்கள் வரை கோரக்கூடும் என உக்ரேனிய உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில், இந்தக் கூற்றை ஆதாரமற்றது என வட கொரியா நிராகரித்துள்ளது.