அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த கிம் ஜாங் உன்
அமெரிக்காவுக்கு எந்த விவகாரத்திலும் அடிபணியவோ ஒத்துழைக்கவோ முடியாது என வடகொரியா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் வடகொரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவுக்கு எதிராக ஏவுகணையை ஏவி உலக நாடுகளை உலுக்க எங்களால் முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, தங்களிடம் ஹைட்ரஜன் வெடிகுண்டுகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
சமகாலத்தில் பல நாடுகள் அமெரிக்காவுடன் பணிந்து செல்வதுடன், கண்மூடித்தனமான ஒப்பந்தங்களையும் முன்னெடுத்து வருகிறது என குறிப்பிட்டுள்ள வடகொரியா, இந்த பூமியிலேயே அமெரிக்காவின் முக்கிய பகுதிகளை தாக்கும் வகையிலான ஏவுகணைகள் தங்களிடம் மட்டுமே உள்ளதாகவும் வடகொரியாவின் வெளிவிவகார அமைச்சர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் சுமார் 200 நாடுகள் உள்ளன, ஆனால் சில நாடுகளிடம் மட்டுமே ஹைட்ரஜன் வெடிகுண்டுகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வடகொரியா எப்போதும் போருக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நாடு என குறிப்பிட்டுள்ள அவர், சமீபத்தில் சோதனை மேற்கொண்ட ஏவுகணைகள் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்க சாதனை என அந்த அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கைக்கு பதிலளித்துள்ள அமெரிக்க அதிகாரிகள், வடகொரியாவின் இந்த போக்கு உண்மையில் அந்த பிராந்தியத்திற்கு மட்டுமின்றி சர்வதேச அமூகத்திற்கும் எப்போதும் அச்சுறுத்தலே என்றார்.
வடகொரியாவின் இந்த மிக ஆபத்தான ஆயுதங்கள் சேகரிக்கும் போக்கை அமெரிக்கா கண்டிப்பாக கட்டுப்படுத்தும் எனவும், இதனால் மட்டுமே அமெரிக்க இராணுவத்திற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் அச்சுறுத்தல் இருக்காது என அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர்.