செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய வட கொரியா: அச்சத்தில் தென்கொரியா!
வட கொரியா தனது முதலாவது உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமான விண்வெளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியதாக அறிவித்துள்ளது.
எதிரிகளின் ஆபத்தான இராணுவ சூழ்ச்சிகளை முறியடிப்பதற்கு மேலும் சில செயற்கைக் கோள்கள் ஏவப்படும் எனவும் வடகொரியா அறிவித்துள்ளது.
வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் அதன் இராணுவத் திறன்களை கணிசமாக மேம்படுத்த உதவும் என மேற்குலக ராணுவ ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய வட கொரியா
வட கொரியாவின் இராணுவ அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் தென் கொரியா, மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் கசப்பான செய்தியை வழங்கும் வடகொரியாவின் செயற்கைக்கோள் விண்வெளியின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது.
Malligyong-1 என்று பெயரிடப்பட்ட இந்த உளவு செயற்கைக்கோள், நேற்று மாலை பிற்பகுதியில் ஏவப்பட்டதாக தெரிவித்துள்ள வடகொரிய அரச ஊடகம், உளவு செயற்கைக்கோளை ஏவுவது வட கொரியாவின் தற்காப்பு உரிமையை வலுப்படுத்துவதற்கான சட்டப்பூர்வ உரிமை எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் தென் கொரியாவோ வட கொரியாவோ ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் ஐ.நா பாதுகாப்பு பேரவை தடைசெய்த நிலையில் அந்த தடையை பகிரங்கமாக மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன் இன்று காலை முதல் வட கொரியாவுடன் செய்துகொள்ளப்பட்ட உளவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தையும் இடைநிறுத்தியுள்ளது
இந்த நிலையில் உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டதையடுத்து வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் அதனை ஏவிய பணியாளர்களுடன் அதனை கொண்டாடியுள்ளார்.
வடகொரியா முதன்முதலாக கடந்த மே மாத இறுதியில் ஒரு செயற்கைக்கோளை அனுப்பிய போதிலும் அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில் தற்போது அந்த முயற்சி வெற்றியடைந்துள்ளது
வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் கடந்த செப்டம்பர் மாதம் ரஷ்யாவிற்கு விஜயம் செய்தபோது அரச தலைவர் விளாடிமிர் புட்டினுடன் ரஷ்ய விண்வெளி தளத்தை பார்வையிட்ட போது வட கொரியாவின் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் திட்டத்தை மேம்படுத்துவதற்கு உதவுவதற்கு புட்டின் விருப்பம் தெரிவித்த நிலையில் ரஷ்யாவின் உதவியுடன் வடகொரிய இந்த வெற்றியை பெற்றுள்ளதாகவும் கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |