10 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசிய வட கொரியா: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்
North Korea tests 10 short range missiles: வட கொரியா 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனையிட்டு இருப்பது பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசிய வட கொரியா
வியாழக்கிழமை வடகொரியா தனது கிழக்கு கடற்கரைக்கு அப்பால் சுமார் 10 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனையிட்ட சம்பவம் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவின் கூட்டு ராணுவ படை தளபதிகள் வெளியிட்ட அறிக்கையில், வட கொரியா அதன் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள வோன்சான் பகுதியில் இருந்து உள்ளூர் நேரப்படி மதியம் 12.30 மணிக்கு ஏவுகணைகளை வீசி இந்த சோதனையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
வட கொரியாவின் இந்த அடுத்தடுத்த ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து தென் கொரிய ராணுவம் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைகள் குறித்த உளவுத் தகவல்களை தென் கொரிய பாதுகாப்பு அதிகாரிகள் அமெரிக்கா மற்றும் ஜப்பான் அதிகாரிகளுடன் உடனுக்குடன் பகிர்ந்து ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
வட கொரியா ஏவிய அனைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளும் ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 12ம் திகதி கடைசியாக வட கொரியா தனது குறுகிய தூர ஏவுகணை சோதனையை நடத்தி இருந்த நிலையில், சில வார இடைவெளியிலேயே வட கொரியா மீண்டும் இத்தகைய சோதனையை நடத்தியுள்ளது.
இந்த சோதனையின் மூலம் வட கொரியா இந்த ஆண்டு மட்டும் 10 க்கும் மேற்பட்ட முறை இத்தகைய ஏவுகணை சோதனையை மேற்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.///