வடகொரியாவில் வீடு வீடாக சென்று சோதனை செய்யும் அதிகாரிகள்! எதற்காக தெரியுமா?
வடகொரியாவில் வீடு வீடாக சென்று அதிகாரிகள் இருக்கும் மக்களின் கையெழுத்து மாதிரிகளை சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியாவில் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் பற்றி மோசமான தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் அடையாளம் தெரியாத நபர் சுவரில் சில வார்த்தைகளை எழுதியிருந்தார்.
இதனால் அதை எழுதிய நபரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் வட கொரிய அதிகாரிகள் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளனர். குறிப்பாக, பியோங்யாங்கில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் கையெழுத்து மாதிரிகளைக் கோரி வருகின்றனர்.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த மாதம் 23-ஆம் திகதி பியாங்சோன் மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் சுவர்களில், கிம் ஜாங் உன், உன்னால் மக்கள் பட்டினியால் செத்து மடிகிறார்கள் என எழுதி இருந்தது.
இதைக் கண்ட உள்ளூர் அதிகாரிகள் விரைவில் அந்த எழுத்துகளை சுவர்களில் இருந்து துடைத்து அகற்றினர்.
தற்போது, இதை எழுதிய நபரைதேடி வருகின்றனர். இந்த சுவருக்கு அருகில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தகங்களுக்கு சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடு வீடாகச் செல்லும் அதிகாரிகள் அங்குள்ள மக்களின் கையெழுத்து மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.
பஞ்சம் காரணமாக வட கொரியா கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.