அனுபவித்த சித்திரவதை... கிம் ஜோங் உன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரிய பெண்
வட கொரியாவை விட்டு வெளியேறிய பெண் ஒருவர், அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தி வழக்குகளைப் பதிவு செய்துள்ளார்.
துன்புறுத்தப்பட்டு சித்திரவதை
வடகொரியாவை சேர்ந்த சோய் மின்-கியுங் என்பவர் கடந்த 1997ல் வடக்கிலிருந்து சீனாவிற்கு தப்பிச் சென்றார், ஆனால் 2008ல் சீன அதிகாரிகளால் அவர் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டார்.
நாடு திரும்பிய பிறகு கைது செய்யப்பட்ட அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக புகார் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை சியோலில் அவர் வழக்கைத் தாக்கல் செய்த நிலையில்,
வட கொரியாவில் பிறந்த ஒருவர் அங்குள்ள ஆட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது இதுவே முதல் முறை என தென் கொரியாவை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
தென் கொரியர்களின் இதேபோன்ற புகார்கள் மீது தென் கொரிய நீதிமன்றங்கள் கடந்த காலங்களில் வட கொரியாவுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளன, ஆனால் அத்தகைய தீர்ப்புகள் பெரும்பாலும் வடகொரியாவால் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
தற்போது சோய் அளித்துள்ள புகாரில் கிம் ஜோங் மற்றும் வடகொரிய அதிகாரிகள் நால்வரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல தென் கொரியாவின் மனித உரிமைகள் அமைப்பு முடிவு செய்துள்ளது.
இந்த மிருகத்தனமான ஆட்சியின் கீழ் இனி அப்பாவி வட கொரியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, சுதந்திரம் மற்றும் மனித கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு மூலக்கல்லாக இந்த சிறிய நடவடிக்கை அமைய வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன் என்று சோய் தெரிவித்துள்ளார்.
கண்டுகொள்ளவில்லை
மேலும், வட கொரிய ஆட்சியின் சித்திரவதைக்கு ஆளானவராகவும், உயிர் பிழைத்தவராகவும், கிம் வம்சத்தை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வைக்கும் ஆழமான மற்றும் அவசரமான பொறுப்பை நான் சுமக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
சோய் 2012 ல் மீண்டும் வட கொரியாவிலிருந்து தப்பிச் சென்று தெற்கில் குடியேறினார். வடகொரிய அதிகாரிகளால் ஏற்பட்ட பாதிப்பின் உளவியல் அதிர்ச்சி இன்னும் இருப்பதாகவும், தான் தொடர்ந்து மருந்துகளை நம்பியிருப்பதாகவும் அவர் கூறினார்.
2023 ஆம் ஆண்டில், கொரியப் போரின் போது வட கொரியாவில் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட பின்னர் சித்திரவதைக்கு இலக்கான மூன்று தென் கொரிய ஆண்களுக்கு தலா 50 மில்லியன் வோன் ($36,000) இழப்பீடாக செலுத்த சியோல் நீதிமன்றம் வட கொரியாவுக்கு உத்தரவிட்டது.
மேலும், 2024 ஆம் ஆண்டில், ஐந்து கொரிய ஜப்பானிய நபர்களுக்கு தலா 100 மில்லியன் வோன் வழங்க வேண்டும் என வட கொரிய அரசாங்கத்திற்கு உத்தரவிடப்பட்டது.
1960கள் மற்றும் 1980களில் திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ் ஜப்பானில் இருந்து வட கொரியாவிற்குச் சென்ற ஆயிரக்கணக்கானவர்களில் இவர்களும் அடங்குவர். ஆனால் இந்த இரு வழக்குகள் தொடர்பான தீர்ப்பையும் வடகொரியா கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |