இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே வாழ்க்கை - சாமானியரை போல் காத்திருக்கும் பட்டத்து இளவரசி
நோர்வே பட்டத்து இளவரசி இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உயிர் வாழ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
நோர்வே பட்டத்து இளவரசி
நோர்வேயின் பட்டத்து இளவரசி மெட்டே மேரிட்(Mette Marit). இவர் நோர்வே மன்னர் ஹரால்ட்டின் ஒரே மகனான, பட்டத்து இளவரசர் ஹாக்கானின் மனைவி ஆவார்.

பட்டத்து இளவரசி மெட்டே மேரிட்டிற்கு கடந்த அக்டோபர் 2018 இல், நுரையீரல் நார்ப்பெருக்கம்(pulmonary fibrosis) இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நோய், சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துவதோடு, நுரையீரல்களை இறுகச் செய்யும் தழும்புத் திசுக்களையும் உருவாக்குகிறது. இதனால் சுவாசிப்பதும், ஆக்சிஜன் இரத்த ஓட்டத்தில் கலப்பதும் கடினமாகிறது.
அவரது உடல்நிலை கடந்த சில மாதங்களாக மோசமடைந்து வரும் நிலையில், அவர் சிகிச்சை பெற்று வரும் ஓஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனை அவரை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்துள்ளது.
நுரையீரலுக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான வழிகாட்டுதல்கள் மருத்துவமனையில் உள்ளதாகவும், பட்டத்து இளவரசிக்கு எப்போது மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் என்பதைக் கணிக்க இயலாது என்று மருத்துவமனையின் சுவாசத்துறை நிபுணரான ஹோம் தெரிவித்துள்ளார்.

மேலும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காகப் பட்டியலில் உள்ள நோயாளிகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், அவர்கள் வாழ்வதற்கு இன்னும் ஓராண்டு மட்டுமே எஞ்சியிருக்க வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது.
அறுவை சிகிச்சை முடியும் வரை, பட்டத்து இளவரசியால் வழக்கம் போல் பணிபுரியவோ அல்லது அலுவல் பணிகளில் ஈடுபடவோ இயலாது என நோர்வே அரசவை தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைகழகத்தில் படித்து வந்த அவரது மகளான இளவரசி இங்க்ரிட் அலெக்ஸாண்ட்ரா தனது தாயுடன் இருப்பதற்காக படிப்பை பாதியில் இடைநிறுத்தி விட்டு நாடு திரும்புகிறார்.
பட்டத்து இளவரசியுடன் நேரம் செலவிடுவதற்காக இளவரசர் ஹாக்கான் தனது உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பயணங்களைக் குறைத்துக்கொள்வதோடு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
பட்டத்து இளவரசியாக இருந்தாலும், உயிருக்கு ஆபத்தான நிலையிலும் சாமானிய மக்களை போல் நுரையீரலுக்கு பதிவு செய்து காத்திருப்பது மக்களிடையே கவனத்தை பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |