கொரோனா தொற்றின் கோர முகத்தை நாம் இன்னமும் பார்க்கவில்லை: மீண்டும் எச்சரிக்கும் பில் கேட்ஸ்
கொரோனா தொற்றுநோயின் மிக மோசமான நிலையை உலகம் இதுவரை எதிர்கொள்ளவில்லை என மைக்ரோசாப்ட் கோடீஸ்வரர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
உலக மக்களை அச்சுறுத்தும் எண்ணம் தமக்கில்லை என குறிப்பிட்டுள்ள பில் கேட்ஸ், ஆனால் இன்னும் விரைவாக பரவும், இன்னும் அபாயகரமான மாறுபாடு உருவாகும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளார்.
கொரோனா தொற்றின் உக்கிரத்தை நாம் இதுவரை எதிர்கொள்ளவில்லை என்பது தாம் உண்மை என குறிப்பிட்டுள்ள பில் கேட்ஸ், நாம் இன்னமும் கொரோனா தொற்றின் கோரப் பிடியில் இருந்து முழுமையாக வெளியேறிவிடவில்லை என்றார்.
கொரோனா போன்ற ஒரு பெருந்தொற்று தொடர்பில் 2015ல் இருந்தே தாம் எச்சரித்து வந்துள்ளதாக 2021 டிசம்பர் மாதம் பில் கேட்ஸ் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.
மார்ச் 2020 வரையான காலகட்டத்தில் கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 6.2 மில்லியன் மக்கள் மரணமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சமீப வாரங்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் பெருமளவு சரிவடைந்துள்ளது.
இதனிடையே WHO தலைவர் Dr. Tedros Adhanom Ghebreyesus கொரோனா தொடர்பில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். கொரோனா பரவல் தொடர்பில் உலக நாடுகள் பல தங்கள் கண்காணிப்பை விலக்கிக்கொண்டுள்ளதாகவும், இது ஆபத்தை வரவழைக்கும் போக்கு என அவர் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையிலேயே பில் கேட்ஸ் கொரோனா தொடர்பில் தமது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், உலக நாடுகள் பெருந்தொற்று தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுக்க போதிய வசதிகளை கட்டமடைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அமெரிக்காவை பொறுத்தமட்டில் தற்போது நாளுக்கு 60,251 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் மார்ச் மாதம் 1ம் திகதிக்கு பின்னர் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்கள் என்ணிக்கை 60,000 கடந்துள்ளது.
மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் 327 பேர்கள் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைவதாகவும், இது கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் 10% சரிவடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், அமெரிக்காவின் 8 மாகாணங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது.
மேற்கு வர்ஜீனியா மாகாணத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.