அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார் நோவக் ஜோகோவிச்
டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் பொருட்டு அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான முயற்சியில் தோல்வியடைந்த பின்னர் ஞாயிற்றுக்கிழமை நாட்டில் இருந்து நோவக் ஜோகோவிச் வெளியேற்றப்பட்டார்.
தடுப்பூசி மறுப்பாளரான நோவக் ஜோகோவிச் மெல்போர்ன் விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அமீரக மாகாணமான துபாய்க்கு செல்வார் என தெரிய வந்துள்ளது. ஆனால் அங்கிருந்து அவர் எங்கு செல்வார் என்பது தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
பெரும்பாலும் ஸ்பெயின், மொனாக்கோ அல்லது அவரது சொந்த நாடான செர்பியாவுக்கு செல்லலாம் என்றே கூறப்படுகிறது. உலகின் நம்பர் 1 டென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஹோகோவிச், கடந்த 10 நாட்களில் அவுஸ்திரேலிய அரசுடன் மேற்கொண்ட போராட்டங்கள் உலக மக்களின் கவனத்தை அவுஸ்திரேலியா மற்றும் நோவக் ஜோகோவிச் மீதும் திருப்பியது.
ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் அறிவித்த முடிவு தமக்கு மிகுந்த ஏமாற்றமளிப்பதாக கூறிய 34 வயது ஜோகோவிச், ஆனால் சட்டத்தை மதித்து நடப்பவன் தாம் என்பதால், நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நாளை மெல்போர்னில் துவங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் நட்சத்திரங்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
இத்தொடரில் 9 முறை கிண்ணம் வென்ற, உலகின் நம்பர்-1 வீரர், செர்பியாவின் ஜோகோவிச், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. இந்த நிலையில், மெல்போர்ன் சென்ற இவரது விசா உரிய ஆய்வுக்கு பின்னர் ரத்து செய்யப்பட, குடியேற்றத்துறை அதிகாரிகள் சார்பில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
இதை எதிர்த்து நடந்த வழக்கில் வெற்றி பெற்ற ஜோகோவிச், மெல்போர்ன் மைதானத்தில் பயிற்சியை துவங்கினார். ஆனால் குடியேற்றத்துறை விதிகளின் படி, அமைச்சர் அலெக்ஸ் ஹாகே, ஜோகோவிச் விசாவை மீண்டும் ரத்து செய்தார்.
ஜோகோவிச் விசா மீண்டும் ரத்தானதை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் உடனடியாக மேல்முறையீடு செய்தனர். இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், இரு தரப்பிலும் போதிய ஆதாரங்களை வழங்க கால அவகாசம் கொடுத்து, வழக்கை இன்று ஒத்தி வைத்தது.
சட்ட விதிகள் சம்பந்தப்பட்டது என்பதால் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று வழக்கை விசாரித்தது. அப்போது, ஜோகோவிச் சார்பில் சமர்பிக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனால், அவுஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பங்கேற்பதில் ஜோகோவிச்சுக்கு சிக்கல் ஏற்பட்டதுடன், அவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறு கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.