உக்ரைனுடன் போர் ஒருபக்கம்... அணு ஆயுத சோதனை மறுபக்கம்: அடங்காத ரஷ்யா
உக்ரைன் மீதான போர் நீடித்துவரும் நிலையில், அணு ஆயுத ஏவுகணை சோதனை மற்றும் பயிற்சிக்கு ஒப்புதல் அளித்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.
ரஷ்யாவிடம் தற்போது புதிய 50 அணு ஆயுத ஏவுகணைகள் தயார் நிலையில் இருப்பதாக அந்த நாட்டின் விண்வெளி நிறுவனம் Roscosmos-ன் தலைவர் Dmitry Rogozin வெளிப்படையாக அறிவித்த 24 மணி நேரத்தில், ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை முயற்சிகள் இவானோவோ பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
ரஷ்யா வசமுள்ள யார்ஸ் ஏவுகணை மணிக்கு 15,000 மைல் வேகத்தில் இலக்குகளைத் தாக்கி அழிக்க போதுமானது. Dmitry Rogozin வெளியிட்ட தகவலின்படி, ரஷ்யா தற்போது 50 ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் பிரித்தானியாவும் முக்கிய இலக்காக ரஷ்யா கருதுவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த வாரம் பின்லாந்துடனான அதன் எல்லையை நோக்கி அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்தத் தொடங்கிய புடின், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் இணைவதால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ள புடின், ரஷ்யாவால் 10 நொடிகளில் பின்லாந்தை அழித்து ஒழிக்க முடியும் என்றார்.
இதுஒருபுறமிருக்க, ரஷ்யாவின் நட்பு நாடுகளும் தற்போது உக்ரைன் தொடர்பில் மேற்கத்திய நாடுகளை மிரட்டத் தொடங்கியுள்ளன.