கேப்டன் 69 பந்தில் 109 ரன் விளாசியும் வீண்! 33.3 ஓவர்களில் 252 ஓட்டங்கள்..நியூசிலாந்து மிரட்டல் வெற்றி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஷாய் ஹோப் சதம்
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் நேப்பியரில் நடந்தது. 
மழை காரணமாக 34 ஓவர்களாக குறைக்கப்பட்டு மேற்கிந்திய தீவுகள் முதலில் துடுப்பாடியது. அணித்தலைவர் ஷாய் ஹோப் (Shai Hope) ருத்ர தாண்டவம் ஆட, மேற்கிந்திய தீவுகள் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ஓட்டங்கள் குவித்தது.
ஹோப் 69 பந்துகளில் 4 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 109 ஓட்டங்கள் விளாசினார். நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளும், ஜேமிசன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 
ரச்சின் ரவீந்திரா 56 ஓட்டங்கள்
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டெவோன் கான்வே (Devon Conway) மற்றும் ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) கூட்டணி 99 பந்துகளில் 106 ஓட்டங்கள் குவித்தது.
வாணவேடிக்கை காட்டிய ரச்சின் 46 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். 
கான்வே நிதானமாக ஓட்டங்களை சேர்க்க, மறுமுனையில் வில் யங் (11), மார்க் சேப்மன் (0) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆகி வெளியேறினர்.
சதத்தை நோக்கி பயணித்த கான்வே 90 (84) ஓட்டங்களில் இருந்தபோது ஸ்ப்ரின்கர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்தின் வெற்றிக்கு 30 பந்துகளில் 54 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தது.
லாதம், சான்ட்னர் கூட்டணி
அப்போது கைகோர்த்த டாம் லாதம் (Tom Latham), மிட்செல் சான்ட்னர் (Mitchell Santner) கூட்டணி அதிரடியில் மிரட்டியது. இதன்மூலம் நியூசிலாந்து 33.3 ஓவர்களில் 248 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
டாம் லாதம் 29 பந்துகளில் 39 ஓட்டங்களும், சான்ட்னர் 15 பந்துகளில் 34 ஓட்டங்களும் விளாசினர்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |