புது கட்சி தொடங்குகிறாரா ஓ.பி.எஸ்? கட்சி பெயர் என்ன?
அதிமுகவில் ஜெயலலிதாவின் முக்கிய விசுவாசியாக வலம் வந்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதா சிறை சென்ற போது, முதல்வராக ஓ.பன்னீர் செல்வமே நியமிக்கப்பட்டார்.
ஓ.பன்னீர் செல்வம்
ஜெயலலிதா மறைவிற்கு, பின்னர் அதிமுக இக்கட்டான சூழலில் இருந்த போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக நியமிக்கப்பட்டார்.
கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதிவு உருவாக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர்.
ஆட்சியை எடப்பாடி நடத்துவதாகவும், கட்சியை ஓபிஎஸ் நடத்துவதாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன் பின்னர் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில், ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்பட்டதுடன் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
எடப்பாடி பழனிசாமி கட்சியை தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். மீண்டும் கட்சியில் இணைய ஓ.பி.எஸ், பாஜக மூலம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.
கடந்த தேர்தலின் போதே, அமித்ஷா ஓ.பி.எஸ்ஸை மீண்டும் கட்சியில் இணைக்குமாறு கோரிக்கை வைத்தார், ஆனால் எடப்பாடி கட்சியில் சேர்க்க முடியாது என்ற நிலைப்பாட்டில் தற்போது வரை உறுதியாக உள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சை வேட்பாளராக ராமநாதபுரம் தொகுதியில் களமிறங்கிய ஓ.பி.எஸ் தோல்வியை தழுவினார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி இணைந்துள்ள நிலையில், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டேன் என அமித்ஷா அறிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் அதிமுக
இந்நிலையில், தனி கட்சி தொடங்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக, எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தனது ஆதரவாளர் ஜோதி ராமன் மூலமாக தேர்தல் ஆணையத்தில் கட்சி பெயரை பதிவு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த டிசம்பரில் அளித்த இந்த விண்ணப்பத்திற்கு, 2025 ஜனவரி மாதம் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது.
மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரனின் ஆலோசனையின் பேரிலே, ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கும் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |