பொலிஸ் ஏஎஸ்ஐ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரான அதிகாரி
பொலிஸ் ஏஎஸ்ஐ பதவியை உதறி தள்ளிவிட்டு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரான அதிகாரி யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
யார் அவர்?
இந்திய மாநிலமான சத்தீஸ்கர், தாந்தேவாடா மாவட்டம் மாடதி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமாரு காட்தி (30). இவரின் மாவட்டமானது மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது.
மேலும், இந்த மாவட்டம் நக்சலைட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் இருந்து சோமாரு காட்தி படித்து பட்டதாரியாக ஆனார்.
10 வருடங்களுக்கு முன்பாக காவல் துறையில் இணைந்து உதவி சப் இன்ஸ்பெக்டராக(ஏஎஸ்ஐ) பதவி உயர்வு பெற்றார்.
இந்நிலையில், தனது பொலிஸ் ஏஎஸ்ஐ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து, கடந்த மாதம் 23-ம் திகதி நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இது குறித்து சோமாரு காட்தி கூறுகையில், "பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நான் பலரின் உதவியால் தான் படித்து பட்டம் பெற்றேன். பின்னர் தேர்வு எழுதி பணியில் சேர்ந்தேன்.
ஆனால், என்னுடைய பகுதி மக்கள் இன்னும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளனர். என்னை போலவே படிக்க முடியாமல் பலரும் உள்ளனர். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
அதற்காக பொலிஸ் ஏஎஸ்ஐ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நின்று வெற்றி பெற்றேன். தற்போது 24 கிராம பஞ்சாயத்துகளிலும் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளேன்.
மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த என்னுடைய உறவினர் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். நக்சல் இயக்கமே இருக்கக்கூடாது. மாணவர்கள் நன்றாக கல்வி கற்க வேண்டும் என்று நான் நன்றாக படித்தேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |