வீடு எரிந்துபோனதால் புது வீட்டுக்கு குடிபெயர்ந்த ஐந்து குழந்தைகளை விடாமல் துரத்திய விதி: அமெரிக்காவில் ஒரு சோக சம்பவம்
அமெரிக்காவில், தாங்கள் வாழ்ந்த வீடு தீயில் எரிந்துபோனதால் மற்றொரு வீட்டுக்கு குடிபெயர்ந்தது ஐந்து குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பம்.
அந்த குடும்பத்தினர் இல்லினாய்ஸில் உள்ள அந்த வீட்டுக்கு வந்து ஐந்து மாதங்களே ஆன நிலையில், பிள்ளைகளின் தாயாகிய Sabrina Dunigan வேலை விடயமாக வெளியில் சென்றிருக்கிறார்.
Deontay Dunigan (9), இரட்டையர்களான Heaven மற்றும் Nevaeh Dunigan (7), Jabari Johnson (4) மற்றும் Loyal Dunigan (2) என்னும் ஐந்து குழந்தைகளும் ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார்கள். மற்றொரு அறையில் பிள்ளைகளின் தாத்தா Greg Dunigan, கண்பார்வையில்லாத பாட்டியாகிய Vanicia Mosley ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அதிகாலை 3 மணியளவில் அந்த வீட்டில் தீப்பிடித்திருக்கிறது.
தாயும் உடன் இல்லாத நிலையில், தீப்பிடித்த வீட்டுக்குள் தனியாக சிக்கிக்கொண்டிருந்திருக்கிறார்கள் குழந்தைகள்.
வீடு தீப்பற்றியதை உணர்ந்த குழந்தைகளின் தாத்தா வீட்டுக்குள் செல்ல முயன்றபோது, தீ பயங்கரமாக எரிந்ததால் அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் போக, தன்னையும் கண் பார்வை இல்லாத தன் மனைவியையும் காப்பாற்றிக்கொள்வதற்காக இருவருமாக ஜன்னல் வழியாக வெளியே குதித்திருக்கிறார்கள்.
பிள்ளைகளின் தாயாகிய Sabrina வீடு திரும்பும்போது, வீடு தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறார். அவரும் எவ்வளவோ முயன்றும் அவராலும் அந்த வீட்டுக்குள் செல்ல இயலவில்லை.
தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தபோது, இரண்டு குழந்தைகள் உயிரிழந்து கிடப்பதையும், மூன்று குழந்தைகள் பேச்சு மூச்சில்லாமல் கிடப்பதையும் கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
அவர்கள் மயங்கிக் கிடந்த மூன்று குழந்தைகளை வீட்டுக்கு வெளியே தூக்கிக்கொண்டு வரும்போதே இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டிருக்கின்றன, கடைசி குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அதுவும் உயிரிழக்க, ஒரே நாளில் அந்த குடும்பத்திலுள்ள ஐந்து குழந்தைகளும் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்தது.
பொலிசார் அந்த வீட்டில் எப்படி தீப்பிடித்தது என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
அந்த குடும்பம் ஒரு வீட்டிலிருந்து தீக்கு தப்பி, இன்னொரு வீட்டுக்கு வந்த நிலையில், அந்த வீட்டிலும் தீயிலேயே அந்த குடும்பத்தின் அத்தனை குழந்தைகளும் உயிரிழந்துள்ள அந்த பரிதாப சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தையும் குடும்பத்தாரிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.