கடனில் இருந்து விடுபட இதுவொரு வாய்ப்பு... அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு அழைப்பு
வெனிசுலாவால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடு பெற விரும்பினால், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக வெனிசுலாவுக்குத் திரும்பி, கணிசமான தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு உரிமை
அமெரிக்க வெள்ளை மாளிகை நிர்வாகிகள் மற்றும் வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் சமீபத்திய வாரங்களில் அமெரிக்க எண்ணெய் நிறுவன நிர்வாகிகளிடம் இதை வலியுறுத்தி வந்துள்ளனர்.

சுமார் 20 வருடங்களுக்கு முன்னர், அப்போதைய வெனிசுலா ஜனாதிபதி ஹ்யூகோ சாவேஸ் கோரியபடி, அரசுக்குச் சொந்தமான PDVSA எண்ணெய் நிறுவனத்திடம் கட்டுப்பாட்டு உரிமையை வழங்க மறுத்த சில சர்வதேச எண்ணெய் நிறுவனங்களின் சொத்துக்களை வெனிசுலா அரசு கையகப்படுத்தியது.
இதில் அமெரிக்காவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான Chevron, நாட்டில் தொடர்ந்து செயல்படுவதற்கும், அரசுக்குச் சொந்தமான PDVSA நிறுவனத்துடன் கூட்டு முயற்சிகளை உருவாக்குவதற்கும் பேச்சுவார்த்தை நடத்திய நிறுவனங்களில் ஒன்றாகும்.
ஆனால், Exxon Mobil மற்றும் ConocoPhillips ஆகிய நிறுவனங்கள் வெனிசுலாவை விட்டு வெளியேறியதுடன், மத்தியஸ்தத்திற்காக அமெரிக்காவிடம் விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில், அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவுக்குத் திரும்பிச் சென்று தத்தளிக்கும் எண்ணெய் துறையை மீண்டும் செயல்படுத்த செலவிடத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை தெரிவித்தார்.
ஆனால், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் எதுவும் உடனடியாக தங்கள் கருத்தை வெளியிடவில்லை. இருப்பினும், சமீபத்தில் அமெரிக்க நிர்வாகம் எண்ணெய் நிறுவன நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில், வெனிசுலாவின் எண்ணெய் தொழிலை மீண்டும் கட்டியெழுப்ப, அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் முதலீட்டுப் பணத்தை தாங்களாகவே வழங்க வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், ConocoPhillips போன்ற நிறுவனத்திற்கு அப்படியான ஒரு முதலீடு என்பது மிகப்பெரிய செலவாக இருக்கும் என்றே குறிப்பிடுகின்றனர். ஏற்கனவே பல ஆண்டுகளாக, Conoco நிறுவனம், சாவேஸ் காலத்தின்போது வெனிசுலாவில் உள்ள தனது சொத்துக்கள் தேசியமயமாக்கப்பட்டதால் ஏற்பட்ட சுமார் 12 பில்லியன் டொலர் இழப்பை மீட்டெடுக்க முயற்சி செய்து வருகிறது.
மிகப்பெரிய எண்ணெய் வளம்
Exxon Mobil நிறுவனமும் வெனிசுலாவில் இழந்த 1.65 பில்லியன் டொலர் தொகையை மீட்டெடுக்க கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், நிறுவனங்கள் திரும்புமா இல்லையா என்பது, நிர்வாகிகளும், இயக்குநர்கள் குழுக்களும், பங்குதாரர்களும் வெனிசுலாவில் மீண்டும் முதலீடு செய்வதில் உள்ள அபாயத்தை எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் என்பதைப் பொறுத்தது என்றே கூறப்படுகிறது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளக் கையிருப்பு உள்ளது. இருப்பினும், தவறான நிர்வாகம், முதலீட்டுப் பற்றாக்குறை மற்றும் அமெரிக்கத் தடைகள் ஆகியவற்றால் கடந்த பல தசாப்தங்களாக அதன் உற்பத்தி கடுமையாகச் சரிந்துள்ளது.
அங்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு செயல்பாடுகளுக்குமான ஒப்பந்தக் கட்டமைப்பு குறித்த நிச்சயமற்ற தன்மைகளைத் தவிர, மீண்டும் திரும்புவதைக் கருத்தில் கொள்ளும் நிறுவனங்கள் பாதுகாப்புச் சிக்கல்கள் மற்றும் மோசமான உள்கட்டமைப்பு போன்றவற்றுடனும் சமாளிக்க வேண்டியிருக்கும்.

அத்துடன், மதுரோவைக் கைது செய்வதற்கான அமெரிக்க நடவடிக்கையின் சட்டபூர்வமான தன்மை மற்றும் நீண்டகால அரசியல் உறுதியற்ற தன்மைக்கான சாத்தியக்கூறுகள் குறித்த கேள்விகளும் முன்வைக்கப்படுகிறது.
OPEC அமைப்பின் நிறுவன உறுப்பினரான வெனிசுலா, 1970களில் ஒரு நாளைக்கு 3.5 மில்லியன் பீப்பாய்கள் வரை உற்பத்தி செய்தது. ஆனால் தற்போது நிர்வாகக்குளறுபடிகளால் கடந்த ஆண்டு சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 1.1 மில்லியன் பீப்பாய்கள் உற்பத்தி செய்யப்பட்டது, இது உலக உற்பத்தியில் வெறும் 1 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |