நடுக்கடலில் நெருப்பு கோளமான கப்பல்: பீதியை கிளப்பும் வீடியோ
நைஜீரியா கடற்பகுதியில் எண்ணெய் உற்பத்திக் கப்பல் ஒன்று வெடித்த சம்பவம் தொடர்பில் வெளியான காணொளி ஒன்று பீதியை கிளப்பியுள்ளது.
குறித்த சம்பவமானது மூன்று மாதங்களில் நாட்டின் இரண்டாவது பெரிய சுற்றுச்சூழல் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சேதமடைந்த கப்பலானது 2 பில்லியன் பீப்பாய் அளவுக்கு எண்ணெய் சேமிக்க போதுமானது என தெரிய வந்துள்ளது.
குறித்த கப்பலை குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்துள்ள நிறுவனம் நடந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளது. மேலும், நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், அந்த கப்பலானது ஒரு நாளைக்கு 22,000 பீப்பாய்கள் வரை உற்பத்திக்கு செயல்திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின்போது 10 ஊழியர்கள் வரையில் கப்பலில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் அவர்களின் நிலை தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
FPSO Trinity owned by Shebah E&P, exploded and sunk today offshore Escravos, a few hours ago#oilandgas #nigerdelta pic.twitter.com/NKnTbyapgV
— BusinessDay (@BusinessDayNg) February 3, 2022
குறித்த சம்பவமானது நைஜீரியாவில் எண்ணெய் தொழில்துறையின் சுற்றுச்சூழல் மரபு மீது மொத்த கவனத்தையும் திருப்பியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம், எண்ணெய் கிணறு ஒன்று வெடித்ததில், சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள ஆறு முழுக்க எண்ணெய் மற்றும் எரிவாயுவால் 5 வாரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது பாதிப்புக்குள்ளான கப்பலில் எவ்வளவு கச்சா எண்ணெய் எஞ்சியிருந்தது என்பதில் உறுதியான தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது.