பிரான்சில் பொலிசார் சுட்டதில் 18 வயது பெண் பலி: நடந்தது என்ன?
பிரான்சில் பொலிசார் சுட்டதில், காரில் பயணித்துக்கொண்டிருந்த 18 வயது பெண் ஒருவர் பலியானார்.
வாகன சோதனையின்போது காரை நிறுத்தாத சாரதியை பொலிசார் துப்பாக்கியால் சுட்டதில் அருகிலிருந்த அந்த பெண் பலியாகியுள்ளார்.
தெற்கு பிரான்சில் Grenoble என்ற இடத்தில், இன்று காலை பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கார் ஒன்றை நிறுத்தும்படி கூற, காரின் சாரதி காரை நிறுத்தாமல் பொலிசாரை நோக்கி வேகமாக வந்ததுடன், பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பொலிசார் திருப்பிச் சுட்டதில், காரில் அந்த நபருக்கு அருகில் அமர்ந்திருந்த 18 வயது பெண் மீது குண்டு பாய்ந்துள்ளது.
கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், அந்த பெண் உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த வாகன சாரதி தப்பியோட முயலும்போது, அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரெஞ்சு தேசிய உள்விவகார அமைப்பு, பொலிசார் துப்பாக்கியால் சுட்டது குறித்து விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ள நிலையில், அந்த சாரதி அரசு அதிகாரியைக் கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டில் மட்டுமே இதுவரை 10க்கும் மேற்பட்டவர்கள் இதுபோல வாகன சோதனையின்போது வாகனத்தை நிறுத்த மறுத்ததற்காக கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.