உக்ரைனின் உறுதிக்கு வலுசேர்க்கும் முதல் பெண்மணி! யார் இவர்?
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் பதற்றம் தொடங்கி கிட்டத்தட்ட 100 நாள்களை கடந்து இருக்கும் இந்த தருணத்தில், மிகச்சிறிய ராணுவ துருப்புகளை மட்டுமே கொண்ட உக்ரைன் நாடு, மேற்கத்திய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்புடன் இணையும் தனது சுதந்திர கொள்கை முடிவிற்காக, உலகின் மிகப்பெரிய ராணுவம் பலம் கொண்ட ரஷ்யா எதிர்த்து நின்று சரணடையாமல் தொடர்ந்து போராடி வருகிறது.
இந்த நிலையில் ரஷ்ய ராணுவத்தின் முதல் குறியாக அந்த நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் இரண்டாவது குறியாக அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் போதியிலும், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது தாய்நாட்டின் தலைநகர் கீவ்வை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து ரஷ்ய தாக்குதலை எதிர்த்து போராடி வருகிறார்.
இதன் காரணமாக ரஷ்ய ராணுவ துருப்புகள் உக்ரைனுக்குள் நுழைந்த ஒருசில தினங்களிலே உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உலகின் வீரமிக்க தலைவராக பொதுமக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.
உக்ரைன் ஜனாதிபதியின் இந்த தீர்க்கமான முடிவுக்கு அவரது மனைவி ஒலேனா ஜெலென்ஸ்காவின் முழுமையான ஒத்துழைப்பும், அவரது கணவரின் மிகப்பெரிய ஆதரவாளராக உருவெடுத்ததுமே முக்கிய காரணமாக பார்க்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் ரஷ்ய படையெடுப்பை அந்தநாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முதல் குடிமகனாக எதிர்த்து நிற்க, அவரது மனைவி ஒலேனா ஜெலென்ஸ்கா நம்பிக்கையை பரப்பும் மனிதாபிமான செயல்களை ஒளிபரப்பும் பணிகளில் முதல் பெண்மணியாக போர்க்களத்தில் இறங்கியுள்ளார்.
அதனால், உக்ரைன் மக்களின் உறுதிக்கும், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் உறுதிக்கும் முக்கிய காரணமாக விளங்கும் அவரது மனைவி ஒலேனா ஜெலென்ஸ்காவை பற்றியம் நாம் தெரிந்து கொள்ளவது தற்போது மிக முக்கியமாகிறது.
ஒலேனா ஜெலென்ஸ்காயும், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடான காதலும்:
ஒலேனா ஜெலென்ஸ்கா 1978ல் கிரிவி ரிஹில் என்ற இடத்தில் பிறந்துள்ளார். கட்டிடக்கலை படிப்பை முடித்த ஜெலென்ஸ்கா பின்பு தனது தொழிலை எழுத்துப்பணிக்கு மாற்றியுள்ளார்.
ஸ்டுடியோ க்வார்டல் 95 என்ற தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவராக இணைந்த ஒலேனா உக்ரைனில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுக்கு தனது எழுத்து பணிமூலம் புகழ்பெற்றார்.
பின்பு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை Kryvyi Rih தேசிய பல்கலைக்கழகத்தில் சந்தித்த ஒலேனா ஜெலென்ஸ்கா தனது 8 வருட காதல் வாழ்க்கைக்கு பிறகு கடந்த 2003ம் ஆண்டு அவரை திருமணமும் செய்து கொண்டுள்ளார்.
ஒலேனா ஜெலென்ஸ்கா, ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகிய இருவருக்கும் ஒலெக்ஸாண்ட்ரா என்ற மகளும், கைரிலோ என்ற மகனும் உள்ளனர்.
ஒலேனா ஜெலென்ஸ்காவின் பொதுப்பணிகள்:
ஒலேனா ஜெலென்ஸ்கா உக்ரைனில் உள்ள பள்ளி குழந்தைகளின் ஊட்டச்சத்து சீர்திருத்தங்களில் முதலில் பணியாற்றியுள்ளார், பின்னர் உக்ரைனிய மகளிர் காங்கிரஸால் குறிப்பிடப்பட்ட பாலின பாதுகாப்பு மற்றும் கலாச்சார இராஜதந்திரம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய தேசிய மூலோபாயத்தின் வளர்ச்சியிலும் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ரஷ்ய போரும், ஒலேனா ஜெலென்ஸ்காவின் முன்னெடுப்பும்:
உக்ரைனில் ரஷ்ய போரை தொடங்கியதில் இருந்தே அந்த நாட்டின் மக்களின் நம்பிக்கை வளர்க்கும் முயற்சியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
அந்தவகையில் ரஷ்ய ராணுவம் ஷெல் தாக்குதலை நடத்திய வெடிகுண்டு பதுங்கு குழியில் பிறந்த ஒரு குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மிகவும் வித்தியாசமான சூழ்நிலையில் இந்த குழந்தை பிறந்து இருப்பதாகவும், இந்த வெடிகுண்டு பதுங்குழியில் பிறந்த இந்த குழந்தைகள் நிச்சியமாக அமைதியான உலகத்தில் வசிக்கும் என உக்ரைன் மக்களுக்கு நம்பிக்கையூட்டி பதிவிட்டிருந்தார்.
அதைப்போலவே தனது மற்றொரு இன்ஸ்டாகிராம் பதிவில், உக்ரைன் நாட்டின் தேசியக்கொடியை பதிவிட்டு உங்களுடன் அதே நாட்டில் வாழ்வதில் நான் பெருமைப்படுகிறேன்.இன்று எனக்கு பீதியும் கண்ணீரும் இருக்காது.
மேலும் நான் அமைதியாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறேன். என் குழந்தைகள் என்னைப் பார்க்கிறார்கள், நான் எனது குழந்தைகளுடனும் கணவருடனும் உக்ரைனில் இங்கே இருக்கிறேன். நான் உக்ரைனை நேசிக்கிறேன்! பதிவிட்டு என இருந்தார்.
மேலும் அவர் இந்த போரினால் உக்ரைனில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது .