பாகிஸ்தான் மலை உச்சியில் கைவிடப்படும் ஜேர்மன் ஒலிம்பிக் சேம்பியனின் உடல்
இரு முறை ஒலிம்பிக் சேம்பியன் பட்டம் வென்ற லாரா டால்மியரின் உடல், அவர் விபத்தில் சிக்கி மரணமடைந்த பாகிஸ்தானில் உள்ள மலையின் உச்சியிலேயே விடப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டால்மியரின் விருப்பம்
திங்கட்கிழமை கரகோரம் மலைகளில் உள்ள லைலா சிகரத்தில் சுமார் 5,700 மீற்றர் உயரத்தில் திடீரென ஏற்பட்ட பாறை சரிவில் சிக்கி 31 வயதான டால்மியர் மரணமடைந்தார்.
அவருடன் சென்றவர்கள் உடனடியாக மீட்பு சேவைகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில், சர்வதேச மீட்புக் குழு ஒன்று உடனடியாக அப்பகுதிக்கு அனுப்பப்பட்டது.
இருப்பினும், செவ்வாய்க்கிழமை காலை ஒரு ஹெலிகொப்டர் மட்டுமே விபத்து நடந்த இடத்தை அடைந்தது, மீட்புப் பணியாளர்களால் டால்மியரின் உடலை மீட்க முடியவில்லை.
இந்த நிலையில் டால்மியரின் விருப்பத்தை மதித்து அவரது உடலை மலையில் விட்டுச் செல்ல உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இப்படியான முடிவு தமக்கு ஏற்பட்டால், காப்பாற்ற எவரும் தங்கள் உயிரைப் பணயம் வைக்கக் கூடாது என்று டால்மியர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை குறிப்பிட்டுள்ளனர்.
மலை உச்சியில் நல்லடக்கம்
அவரது விருப்பம் அதுவென்றால், அதை மதிப்பது முறை என்று உறவினர்களும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவரது உடல் மலையிலேயே கைவிடப்படும் என்பதை அதிகாரிகள் உத்தியோகப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
டால்மியர் தனது மலையேறும் நண்பரான மெரினா ஈவா க்ராஸுடன் ஹுஷே பள்ளத்தாக்கில் ஏறிக்கொண்டிருந்தபோது, பாறைகள் சரிந்து விழும் நிலையில் விபத்தில் சிக்கினார்.
அவர் அதில் உடனடியாக மரணமடைந்திருக்கலாம் என்றே கூறுகின்றனர், அதே நேரத்தில் க்ராஸ் காயமின்றி தப்பியிருந்தார். மலை உச்சியில் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது தமது கனவு என்று டால்மியர் பலமுறை கூறி வந்துள்ளதுடன், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இது தொடர்பில் பதிவு செய்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |