ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்தது! கடைசி நாளில் சீனாவை தட்டி தூக்கிய அமெரிக்கா: வெளியான டாப் 10 பதக்க பட்டியல்
ஐப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் இன்றோடு நிறைவடைந்த நிலையில், கடைசி நாளில் சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்தது.
உலகின் மிகப்பெரும் விளையாட்டு திருவிழாவாக பார்க்கப்படும் ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை மாதம் ஜுலை 23-ஆம் திகதி துவங்கியது.
கடந்த ஆண்டே நடைபெற வேண்டிய இந்த தொடர், கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, அதன் பின் இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலகலமாக நடைபெற்றது.
கடந்த 16 நாட்களாக நடந்து வந்த ஒலிம்பிக் போட்டிகள் இன்றோடு நிறைவடைந்தன. இதற்கான நிறைவு விழா கொண்டாட்டங்கள் அங்கு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிலையில், இந்த ஒலிம்பிக் போட்டியில், அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்று, டாப் 3 வரிசையில் உள்ளன.
இதில் ஒலிம்பிக் போட்டியின் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய சீனா, பதக்கப்பட்டியலில் தங்கங்களை அள்ளி முதலிடத்தில் இருந்தது. இதற்கு அடுத்த படியாக அமெரிக்கா இருந்தது.
ஆனால், கடைசி நாளான இன்று 3 தங்க பதக்கங்களை வென்று சீனாவை அமெரிக்கா பின்னுக்கு தள்ளியது. மொத்தம் 39 தங்க பதக்கம், 41 வெள்ளி பதக்கம், 33 வெண்கலப் பதக்கம் என 113 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 38 தங்கப் பதங்கங்கள், 32 வெள்ளி பதக்கங்கள், 18 வெண்கலப் பதக்கம் என 88 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 27 தங்கப் பதக்கம், 14 வெள்ளிப் பதக்கம், 17 வெண்கலப் பதக்கம் என 58 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவுக்கும், சீனாவுக்கு பல விதங்களில் போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் இந்த ஒலிம்பிக்கிலும் இருநாடுகளுக்கிடையே யார் கிங் என்று போட்டி நிலவியது.
அதில் இறுதியாக அமெரிக்கா சீனாவை பின்னுக்கு தள்ளியுள்ளது.
மேலும், பிரித்தானியா 22 தங்கப்பதக்கம், 21 வெள்ளி, 22 வெண்கலம் என 65 பதக்கங்களுடன் நான்காவது இடத்திலும், பிரான்ஸ் 10 தங்கப்பதக்கம், 12 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 33 பதக்கங்களுடன், 8-வது இடத்திலும், கனடா 11-வது இடத்திலும், ஜேர்மனி 9-வது இடத்திலும், இலங்கை எந்த ஒரு பதக்கமும் வெல்லாத காரணத்தினால், அதற்கு வரிசை குறிப்பிடவில்லை.
அதே சமயம் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் 48-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.