போரால் இரு முறை அகதிகளாகும் நிலைக்கு ஆளான குடும்பத்தின் பரிதாபக் கதை
ஏற்கனவே ஒரு முறை போர் காரணமாக அகதியாக தன் நாட்டை விட்டு வெளியேறிய ஒருவர், தற்போது மீண்டும் போர் காரணமாக அகதிகளாக தன் குடும்பத்துடன் தான் வாழும் நாட்டை விட்டு வெளியேறவேண்டிய சூழல் உருவாகியுள்ளது குறித்து துயரத்துடன் தெரிவிக்கிறார்.
Mohamud Abdi (31) சோமாலியா நாட்டைச் சேர்ந்தவர். சோமாலியாவில் நடந்த சிவில் யுத்தத்துக்குத் தப்பி, தன் மனைவியுடன் 2015ஆம் ஆண்டு எத்தியோப்பியா மற்றும் ரஷ்யா வழியாக உக்ரைனை வந்தடைந்தார்.
தான் பாதுகாப்பான ஒரு ஐரோப்பிய நாட்டை வந்ததடைந்ததில் அவருக்கு பெருமகிழ்ச்சி...
ஆனால், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அகதியாக தான் வாழும் நாட்டிலிருந்து வெளியேறும் ஒரு சூழல் அவரது குடும்பத்துக்கு உருவாகியுள்ளது. அதுவும் போர் காரணமாக!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து தாங்கள் வாழ்ந்து வந்த வீட்டிலிருந்து தன் மனைவி Zamzam மற்றும் ஏழு வயது மகள் Ruweydaவுடன் சில பொருட்களை பைகளில் அடைத்துக்கொண்டு உயிர் தப்பும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் Abdi.
பேருந்து ஒன்றில் இடம் கிடைக்க, போலந்து நாடு நோக்கி பயணித்திருக்கிறது அந்தக் குடும்பம், அவர்களைப் போலவே உயிர் தப்பி ஓடும் மற்றவர்களுடன். எப்போது வானத்திலிருந்து ரஷ்யா குண்டு வீசுமோ என பயந்துகொண்டே, எதிர்காலத்தைக் குறித்த சந்தேகத்துடன் மூன்று நாட்களுக்குப் பின் உக்ரைன் போலந்து எல்லையை வந்தடைந்திருக்கிறார்கள் அவர்கள்.
இப்போது ஜேர்மனியிலுள்ள Kassel நகரில் புகலிடம் கோரியிருக்கிறது Abdi குடும்பம்.
முதல் முறையும் போர் காரணமாகத்தான் என் நாட்டை விட்டு உயிர் தப்ப ஓடிவந்தேன். இப்போது ஐரோப்பாவிலிருக்கும் எனது இரண்டாவது வீட்டையும் அதே போர்தான் பாதித்துள்ளது. மீண்டும் நான் அகதியாக புகலிடம் கோரும் நிலைக்கு ஆளாகியுள்ளேன் என்கிறார் Abdi கவலையுடன்...