ஈரான் மீதான போர் - அமெரிக்காவை கடுமையாக விமர்சித்த ஓமன் அமைச்சர்
ஈரான் மீதான போர் தொடர்பாக ஓமன் வெளியுறவு அமைச்சர் அமெரிக்காவை விமர்சித்துள்ளார்.
ஓமன் வெளியுறவு அமைச்சர்
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் மீதான தாக்குதல் தொடங்கும் முன்னர், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணுசக்தி பேச்சுவார்த்தையை ஓமன் வெளியுறவு அமைச்சர் சையத் பத்ர் அல்புசைதி மத்தியஸ்தம் செய்து வந்தார்.

இந்நிலையில், ஈரான் மீதான போர் தொடர்பாக ஓமனின் வெளியுறவு அமைச்சர் சையத் பத்ர் அல்புசைதி அமெரிக்காவை விமர்சித்துள்ளார்.
அமெரிக்க நிர்வாகத்தின் தவறான கணிப்பு
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், "சமீபத்திய பேச்சுவார்த்தைகள் முடிந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, சிறிது காலம் சாத்தியமாகத் தோன்றிய அமைதிக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் மீண்டும் ஒரு சட்டவிரோத இராணுவத் தாக்குதலைத் தொடுத்தது அதிர்ச்சியளித்தது, ஆனால் ஆச்சரியமளிக்கவில்லை.

அமெரிக்க நிர்வாகத்தின் மிகப்பெரிய தவறான கணிப்பு என்பது, முதலிலேயே இந்தப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதுதான். இது அமெரிக்காவின் போர் இல்லை.
மேலும் இதில் இஸ்ரேலும் அமெரிக்காவும் தாங்கள் விரும்புவதைப் பெறும் சாத்தியமான சூழ்நிலை எதுவும் இல்லை.
இந்தப் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருக்கும் இதனால் எந்தப் பயனும் இல்லை என்பதும், கூடிய விரைவில் போர் நிறுத்தத்தை கொண்டுவருவதில்தான் ஈரான் மற்றும் அமெரிக்காவின் தேசிய நலன்களும் அடங்கியுள்ளன.
கட்டுப்பாட்டை இழந்த அமெரிக்கா
ஈரான் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் மற்றும் கடந்த ஆண்டு அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க-நடத்திய குண்டுவீச்சுகளால் ஈரான் மிகவும் பலவீனமடைந்துவிட்டதால், உச்சத் தலைவர் கொல்லப்பட்டால் நிபந்தனையற்ற ஈரான் சரணடையும் என்று இஸ்ரேலியத் தலைமை அமெரிக்காவை நம்பவைத்ததாகத் தெரிகிறது.
இது சொல்வதற்கு ஒரு சங்கடமான உண்மை, ஆனால் சொல்லியே ஆக வேண்டும். அமெரிக்கா தனது சொந்த வெளியுறவுக் கொள்கையின் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டது.
அமெரிக்கப் பாதுகாப்பு ஒத்துழைப்பின் மீது நம்பிக்கை வைத்திருந்த வளைகுடா நாடுகள், தற்போது அந்த ஒத்துழைப்பைத் தங்களின் தற்போதைய பாதுகாப்பிற்கும், எதிர்காலச் செழிப்பிற்கும் அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு கடுமையான பலவீனமாகக் கருதுகின்றன" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |