இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதியை மீண்டும் நிறுத்திய ஓமன்.., தமிழக கோழிப்பண்ணை தொழில் நெருக்கடி
உயிரியல் பாதுகாப்பைக் காரணம் காட்டி, இந்தியவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதை ஓமன் நிறுத்தியுள்ளது.
முட்டை இறக்குமதி நிறுத்தம்
தமிழகத்தில் உள்ள நாமக்கல் கோழிப்பண்ணையில் இருந்து, ஓமன், கத்தார், துபாய், அபுதாபி, மஸ்கட், மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவின் முட்டை ஏற்றுமதியில் ஓமன் மட்டும் 50% பங்கு வகிக்கிறது. ஆனால், ஜூன் மாதத்திற்குள் முட்டைகளின் எண்ணிக்கை 11.4 கோடியில் இருந்து வெறும் 2.6 கோடியாக வெகுவாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில், இந்திய கோழி முட்டைகளின் இறக்குமதிக்கான அனுமதியை செவ்வாய்க்கிழமை முதல் ஓமன் நிறுத்தியுள்ளது.
இதையடுத்து, தரம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளை காரணம் காட்டி இந்திய முட்டைகளுக்கு எடை கட்டுப்பாடுகளை விதிக்கவும், இறக்குமதி அனுமதி வழங்குவதை நிறுத்தவும் கத்தார் முடிவெடுத்துள்ளது.
இந்த முடிவு தமிழகத்தின் முக்கிய முட்டை உற்பத்தி மையமான நாமக்கல்லின் கோழிப்பண்ணை தொழிலுக்கு பலத்த அடியை கொடுத்துள்ளது.
ஓமன் மற்றும் கத்தார் நாடுகளின் நடவடிக்கையால் முட்டை ஏற்றுமதி வர்த்தகம் வெகுவாக குறைந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நெருக்கடியால் கோழிப்பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் குறித்த அச்சமும் எழுந்துள்ளது.
முட்டை ஏற்றுமதி சரிவினால் நாமக்கல்லில் கோழிப்பண்ணையாளர்களுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று குழு வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பிரச்னை குறித்து திமுக எம்பி கே.ஆர்.என் ராஜேஷ் குமார் நாடாளுமன்றத்தில் பேசுகையில், "ஓமன் மற்றும் கத்தாரில் உள்ள அதிகாரிகளுடன் மத்திய அரசு கலந்து பேசித் தீர்க்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த தடையால், சோஹார் துறைமுகத்தில் கண்டெய்னர்கள் சிக்கியுள்ளதால், ஏற்றுமதியாளர்களுக்கு பெருகிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, ரூ.15 கோடி மதிப்பிலான முட்டைகள் தேங்கியுள்ளதாக நாமக்கல்லைச் சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளரும், கால்நடை மற்றும் வேளாண் விவசாயிகள் வர்த்தக சங்கத்தின் (LIFT) பொதுச் செயலாளருமான பி.வி.செந்தில் கூறியுள்ளார்.
கடந்த ஜூன் முதல் முட்டை இறக்குமதிக்கான அனுமதியை நிறுத்திய ஓமன், பல விவாதங்களுக்கு பின்னர் கட்டுப்பாடுகள் விதித்து முட்டை இறக்குமதியை தொடங்கியது. இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை முதல் மீண்டும் இறக்குமதியை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |