இலங்கையில் களமிறக்கப்பட்ட இராணுவம்: கவலை தெரிவித்த அமெரிக்கா
கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து முழுமையான விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் அதேவேளையில், இலங்கையில் இராணுவத்தை நிலைநிறுத்துவது குறித்து அமெரிக்க வெளிவிவகராத்துறை தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையில் இராணுவத்தின் நிலைநிறுத்தம் குறித்து கவலைப்படுவதாகவும். அமைதியான எதிர்ப்பாளர்கள் வன்முறை அல்லது அச்சுறுத்தலுக்கு ஆளாகக்கூடாது, அது இராணுவப் படை அல்லது பொதுமக்கள் பிரிவாக இருந்தாலும் சரி என்று அமெரிக்க வெளிவிவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் செவ்வாயன்று தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து மிகவும் கவலையடைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையை கண்டிப்பதாகவும் நெட் பிரைஸ் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, வன்முறைச் செயல்களைத் தூண்டும் மற்றும் ஈடுபடும் எவரையும் முழு விசாரணை, கைது செய்து, வழக்குத் தொடருமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், தற்போதைய சூழல் தங்களுக்கு கவலை அளிப்பதாகவும், பிரதமர் ராஜினாமா செய்த பின்னர் இலங்கையில் நிலவும் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் நிலவரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் எனவும் நெட் பிரைஸ் குறிப்பிட்டுள்ளார்.