தெருவில் பழங்கள் விற்ற நபர்... இன்று துபாயின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர்
11 வயதில் தெருவில் பழங்கள் விற்று சம்பாதிக்கத் தொடங்கிய சன்னி வர்க்கி இன்று 100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் மத்திய கிழக்கு நாடுகளில் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பாடசாலை ஒன்றை திறக்க உள்ளார்.
ஆங்கில வழி பாடசாலை
GEMS கல்வி குழுமத்தின் நிறுவனரான சன்னி வர்க்கி, துபாயில் வசிக்கும் பெரும் கோடீஸ்வர இந்தியர்களில் ஒருவர். மத்திய கிழக்கு நாடுகளிலேயே அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பாடசாலை ஒன்றை இந்த ஆண்டு GEMS கல்வி குழுமம் புதிதாக திறக்க உள்ளது.
100 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்ய இருப்பதாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். 1957ல் கேரளாவில் பிறந்த சன்னி வர்க்கி, ஆசிரியர்களான பெற்றோருடன் 1959ல் துபாய் மாகாணத்திற்கு குடிபெயர்ந்தார்.
1968ல் மரியாமா மற்றும் கே.எஸ். வர்க்கி தம்பதி ஆங்கில வழி பாடசாலை ஒன்றை திறந்தார்கள். துபாய் மாகாணத்தில் அடிப்படை கல்வியை முடித்த சன்னி வர்க்கி பின்னர் பிரித்தானியாவில் கல்வியை தொடர்ந்தார்.
கல்லூரி படிப்பிற்கு பின்னர் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியில் வேலைக்கு சேர்ந்த சன்னி வர்க்கி, பின்னர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளார். இறுதியில் கடந்த 2000 ஆம் ஆண்டு GEMS கல்வி குழுமத்தை சன்னி வர்க்கி நிறுவினார்.
உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதே GEMS கல்வி குழுமத்தின் நோக்கம். இன்று, சன்னி வர்க்கி நிர்வாகத் தலைவராக பணியாற்றுகிறார், அவரது மூத்த மகன் டினோ வர்க்கி தலைமை நிர்வாக அதிகாரியாகவும், அவரது இளைய மகன் ஜே வர்க்கி நிர்வாக இயக்குநராகவும் உள்ளார்.
GEMS கல்வி குழுமம் பொதுவாகவே அதிக கட்டணம் வசூலித்து வருகிறது. ஆண்டு கல்வி கட்டணம் என்பது ரூ 27.27 லட்சம் என்றே கூறப்படுகிறது. ஆனால் மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வதாக இருந்தால், ஆண்டுக்கு ரூ 48.43 லட்சம் வசூலிக்கின்றனர்.
ஆனால் உலகின் உயர்வான பல பாடசாலைகளை விட GEMS கல்வி குழுமம் குறைவாகவே கட்டணம் வசூலிக்கிறது. சுவிட்சர்லாந்தில் செயல்படும் Institut auf dem Rosenberg பாடசாலையானது ஆண்டுக்கு 176,000 அமெரிக்க டொலர் கட்டணமாக வசூலிக்கிறது.
இங்கிலாந்தில் முதல் பாடசாலை
கலிபோர்னியாவில் செயல்படும் Woodside Priory பாடசாலை ஆண்டுக்கு 90,000 டொலர் கட்டணமாக வசூலிக்கிறது. இங்கிலாந்தின் Eton College ஆண்டுக்கு 21,099 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்கின்றது.
2003ல் இருந்தே GEMS கல்வி குழுமம் உலக நாடுகளில் தங்கள் பார்வையை திருப்பியுள்ளது. இங்கிலாந்தில் தங்கள் முதல் பாடசாலையை திறந்த நிலையில், 2004ல் இந்தியாவில் பாடசாலை ஒன்றை திறந்தது.
தற்போது உலகின் முதன்மையான நாடுகளில் 80 பாடசாலைகளை GEMS கல்வி குழுமம் இயக்கி வருகிறது. 2025 ஜனவரி மாதம் வெளியான தரவுகளின் அடிப்படையில், சன்னி வர்க்கியின் தற்போதைய சொத்து மதிப்பு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |