One in, one out திட்டம்: பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட இரண்டாவது நபரும் பிரித்தானியாவுக்குள் நுழைந்தார்
பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஒரே மாதத்தில் மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழைந்த நிலையில், தற்போது, நாடுகடத்தப்பட்ட இரண்டாவது நபரும் மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார்.
One in, one out திட்டம்
சிறுபடகுகள் மூலம் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கே திருப்பி அனுப்புவதற்காக பிரித்தானியாவும் பிரான்சும் One in, one out திட்டம் என்னும் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன.

அதன்படி, இதுவரை 94 சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி பிரான்சுக்கு அனுப்பப்பட்ட சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் ஒருவர், அக்டோபர் மாதம் 18ஆம் திகதி, சிறுபடகு ஒன்றின்மூலம் மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழைந்தார்.
ஈரான் நாட்டவரான அவர், கடந்த புதன்கிழமை மீண்டும் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்டார்.
இரண்டாவது நபரும் பிரித்தானியாவுக்குள் நுழைந்தார்
இந்நிலையில், One in, one out திட்டத்தின் கீழ் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட இரண்டாவது நபரும் மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவர் பிரித்தானியாவுக்குள் நுழைந்ததும், biometrics மூலமாக அடையாளம் காணப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இயன்றவரையில் விரைவாக பிரான்சுக்கு நாடுகடத்தப்படுவார் என்று கூறியுள்ள உள்துறை அலுவலக செய்தித்தொடர்பாளர், One in, one out திட்டத்தின் கீழ் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்டவர்கள் பிரித்தானியாவுக்கு மீண்டும் வர திட்டமிடுவார்களானால், அது அவர்களுக்கு பணத்தையும் நேரத்தையும் வீணாக்கும் விடயமாகத்தான் அமையும் என்றும் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |