இனி ChatGPT உள்ளேயும் விளம்பரம் - அதிர்ச்சியில் பயனர்கள்
இனி ChatGPT உள்ளே விளம்பரம் காண்பிக்க OpenAI திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ChatGPT
இணையம் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் மக்கள், தங்களுக்கு தேவையான தகவல்களை கூகிளில் தேடி பெற்று வந்தனர்.

தற்போது AI ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தங்களுக்கு தேவையான தகவல்களை ChatGPT, Perplexity, Grok, Gemini போன்ற ஏஐ சாட்பாட்களிடம் கேட்டு பெறுகிறார்கள்.
இதில், தற்போது ChatGPT ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 800 மில்லியன் பயனர்கள் சாட் ஜிபிடியை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
பள்ளி மாணவர்கள் வீட்டுபாடத்தில் சந்தேகம் கேட்பது தொடங்கி, ஐடி ஊழியர்களுக்கு கோடிங் எழுதி தருவது, பயண ஆலோசனை, நிதி ஆலோசனை, உணவுக்கட்டுப்பாடு என பல்வேறு தேவைகளுக்காக அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சாட் ஜிபிடி செயலியில் விளம்பரம்
இந்நிலையில், சாட் ஜிபிடி செயலியின் உள்ளே விளம்பரங்களை காட்ட OpenAI திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாப்பிங் அல்லது சேவைகள் தொடர்பான கேள்விகளை பயனர்கள் கேட்கும்போது, ChatGPT வழங்கும் பதில்களில் ஸ்பான்சர் செய்யப்பட்ட தகவல்களைக் காண்பிக்கும்.

உதாரணமாக, பயனர் வாசனை திரவியம் குறித்து தேடும் போது, ஸ்பான்சர் செய்யப்பட்ட வாசனை திரவிய நிறுவனத்தின் விளம்பரங்களை காண்பிக்கும்.
வழக்கமான Pop-up விளம்பரங்களை போல் இல்லாமல், பதில்களிலே விளம்பரங்களை காண்பிக்க திட்டமிட்டு வருகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சாட் ஜிபிடி வெளியிடவில்லை என்றாலும், ChatGPTயின் உள்ளே விளம்பரங்கள் தோன்றக்கூடிய பல்வேறு வழிகளுக்கான மாதிரிகளை OpenAI ஊழியர்கள் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், தற்போது திட்டமிடல் நிலையிலே உள்ளது, சோதனைக்கு இன்னும்தயாராகவில்லை என கூறப்படுகிறது.
பயனர்களின் உரையாடல்கள் மூலம் அவர்களின் ஆர்வங்களை சேகரிக்கும் ChatGPT, அந்த வரலாற்றின் அடிப்படையிலும் விளம்பரங்களை காட்ட முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், டிஜிட்டல் விளம்பரத்தில் அனுபவமுள்ள நிர்வாகிகளை பணியமர்த்தி வருகிறது. இதன் மூலம், கூகிள், மெட்டா, அமேசான் ஆதிக்கம் செலுத்தும் 1 டிரில்லியன்டொலர் டிஜிட்டல் விளம்பர சந்தையில் ChatGPT கால்பதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனேவே கூகிள் மற்றும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் போன்ற சமூகவலைத்தளங்களில் விளம்பரங்களில் தோன்றி வரும் நிலையில், ChatGPTயும் விளம்பரங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படும் தகவல் பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |