GPT-6.1 அஸ்ட்ரா வெளியீட்டை நிறுத்திய OpenAI: தெரிவித்துள்ள பாதுகாப்பு கவலைகள்
பாதுகாப்பு காரணங்களால் GPT-6.1 அஸ்ட்ரா வெளியீட்டை ஓபன் ஏஐ நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.
GPT-6.1 அஸ்ட்ரா வெளியீடு நிறுத்தம்
தீவிரமான பாதுகாப்பு மதிப்பீடுகள் காரணமாக ஓபன்ஏஐ(OpenAI) நிறுவனம் தனது அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு(AI) மாடலான GPT-6.1 அஸ்ட்ரா(Astra) வெளியீட்டை நிறுத்தி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தானாக இணையத்தில் வலம் வருதல் மற்றும் செயலிகளை பயன்படுத்துதல் போன்ற சிக்கலான டிஜிட்டல் செயல்களை செய்யும் தன்னாட்சி அமைப்பாக இந்த புதிய GPT-6.1 அஸ்ட்ரா மாடல் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த GPT-6.1 அஸ்ட்ரா மாடலானது நிறுவனத்தின் தர அளவுகோல்களை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. எனவே இது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஓபன் ஏஐ நிறுவனத்தின் பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர் சாச்சி ஜெயின் தெரிவித்துள்ளார்.
அத்துமீறி நுழைந்த சம்பவங்கள் மற்றும் நிபுணர்கள் எச்சரிக்கை

கடந்த ஜூன் மாதத்தில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மாடலானது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் வலைத்தளங்கள் மற்றும் பிற அமைப்புகளுக்குள் பாதுகாப்பு இன்றி நுழைந்தது தொடர்பான பாதுகாப்பு மீறல்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
அதே நேரத்தில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின ஓபன்ஏஐ CEO சாம் ஆல்ட்மேன், ஆந்த்ரோபிக்(Anthropic) தலைவர் தாரியோ அமிடோய் ஆகிய முக்கிய தலைவர்கள் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் AI துறையின் வளர்ச்சி வேகத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.