ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம்
செய்தி ஊடகம் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரால் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு செய்தி
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதன் முன்னர், பயங்கரவாத தளங்கள் மட்டுமே தாக்கப்படும், இராணுவ நிலைகள் அல்ல என்று பாகிஸ்தானுக்கு செய்தி அனுப்பப்பட்டதாக இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது மே 6 மற்றும் 7 ம் திகதியின் இடைப்பட்ட இரவில் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்ததன் காரணம், பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் போது அவர்களின் இராணுவம் இதில் தலையிட வேண்டாம் என்பதை எச்சரிக்கவே என தெரிவித்துள்ளார்.
உண்மையில் மிக ரகசியமாக நடத்தப்பட வேண்டிய இராணுவ நடவடிக்கையானது, அதன் ரகசியம் காக்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தமது சமூக ஊடகபக்கத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை முன்னெடுக்கப்போவதாக பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தியுள்ளது உண்மையில் குற்றச்செயல் என குறிப்பிட்டுள்ளார்.
அதை இந்திய அரசாங்கம் செய்துள்ளது என்பதை வெளிவிவகார அமைச்சரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மைக்கு புறம்பானது
மேலும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பில் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த அதிகாரம் அளித்தது யார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மட்டுமின்றி, இதன் காரணமாக எத்தனைப் போர் விமானங்களை இந்தியா இழந்துள்ளது என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது என ஆளும்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் பதிலளித்துள்ளார். வெளிவிவகார அமைச்சகமும் இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது,
அதில் உண்மைகள் தவறாக சித்தரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானை ஏற்கனவே எச்சரித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் பதிவு செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |