இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப்
இந்தியா முன்னெடுத்த சிந்தூர் இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட ஒருவர் தொடர்பில் அதிரவைக்கும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதிரவைக்கும் பின்னணி
பாகிஸ்தானில் அமைந்துள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என இந்திய விமானப்படை அதிரடி நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தது. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இராணுவ அதிகாரிகள் பலர் கலந்துகொண்ட இறுதிச்சடங்கு நிகழ்வு ஒன்று பாகிஸ்தானில் முன்னெடுக்கப்பட்டது. தற்போது அதில் கலந்துகொண்ட ஒருவர் குறித்து அதிரவைக்கும் பின்னணித் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் தரப்பு அந்த நபரை வெறும் சாதாரண நபர் என குறிப்பிட்டுள்ளது. ஆனால் அந்த நபர் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவரான ஹபீஸ் அப்துல் ரவூஃப் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லஷ்கர்-இ-தொய்பா தலைமையகத்தில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச்சடங்கிலேயே ஹபீஸ் அப்துல் ரவூஃப் கலந்துகொண்டுள்ளார். தொடர்ந்து வெளியானப் புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, பாகிஸ்தான் இராணுவம் விளக்கமளிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.
அந்த நபர் நான்கு பிள்ளைகளின் தந்தையான வெறும் சாதாரண நபர் என்றே பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அதற்கு உடனடி பதிலளித்துள்ள இந்தியா, அந்த நபர் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவரான ஹபீஸ் அப்துல் ரவூஃப் என அம்பலப்படுத்தியது.
மும்பை பயங்கரவாத தாக்குதல்
அத்துடன் அமெரிக்கா தடை விதித்துள்ள நபர்களில் ஒருவர் என்றும் 1999ல் இருந்தே ஹபீஸ் அப்துல் ரவூஃப் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், நவம்பர் 2008ல் முன்னெடுக்கப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் நெருங்கிய கூட்டாளி இந்த அப்துல் ரவூஃப் என்றும் நம்பப்படுகிறது.
சிந்தூர் நடவடிக்கையால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் மூத்த ராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸிடமிருந்து மலர்வளையம் வைக்கப்பட்டது. மரியம் நவாஸ் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |