ஆஸ்கர் வென்ற "நோ அதர் லேண்ட்" திரைப்பட இயக்குநர் மீது தாக்குதல்: மேற்கு கரையில் பதற்றம் அதிகரிப்பு!
ஆஸ்கர் விருது வென்ற பாலஸ்தீன திரைப்பட இயக்குநர் இஸ்ரேலிய குடியிருப்புவாசிகளால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்கர் திரைப்பட இயக்குநர் மீது தாக்குதல்
ஆஸ்கர் விருது வென்ற "நோ அதர் லேண்ட்" (No Other Land) ஆவணப்படத்தின் இணை இயக்குநரான ஹம்தன் பல்லால் (Hamdan Ballal), ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு, பின்னர் இஸ்ரேலிய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
சுசியா கிராமத்தில் (Susiya Village) பல்லால் மற்றும் மேலும் இரண்டு பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டதாக நேரில் பார்த்த சாட்சிகளும், சக திரைப்பட இயக்குநர்களும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் லீயா செமல் (Lea Tsemel)வழங்கிய தகவலில், தாக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு இராணுவ தளத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இருப்பினும், அவரால் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.
சம்பவத்தை நேரில் பார்த்தவரான படத்தின் மற்றொரு இணை இயக்குநரான பாஸல் அட்ரா (Basel Adra), சுமார் இரண்டு டஜன் குடியேற்றவாசிகள், சிலர் முகமூடி அணிந்து ஆயுதங்களுடன் கிராமத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
அதே நேரம் , சம்பவ இடத்திற்கு வந்த இஸ்ரேலிய வீரர்கள், பாலஸ்தீனிய குடியிருப்பாளர்களை நோக்கி ஆயுதங்களால் குறிவைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
"ஆஸ்கர் விருதுகளிலிருந்து நாங்கள் திரும்பியதிலிருந்து, தினமும் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறோம்," என்று அட்ரா அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார்.
மறுப்பு தெரிவித்த இஸ்ரேல்
இஸ்ரேலிய ராணுவம் இதற்கு மாறான தகவலை வழங்கியுள்ளது.
அதில், தங்கள் படைகளை நோக்கி கற்களை வீசியதாக சந்தேகிக்கப்படும் மூன்று பாலஸ்தீனியர்களையும், இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே நடந்த "வன்முறை மோதலில்" ஈடுபட்ட ஒரு இஸ்ரேலிய குடிமகனையும் கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.
நோ அதர் லேண்ட்
இஸ்ரேலிய இராணுவத்தால் அவர்களின் கிராமங்கள் இடிக்கப்படுவதை எதிர்க்கும் மசாஃபர் யட்டா பிராந்தியத்தில் வசிப்பவர்களின் போராட்டங்களை விவரிக்கும் "நோ அதர் லேண்ட்" சிறந்த ஆவணப்படத்திற்கான அகாடமி விருதைப் பெற்றது.
2024 ஆம் ஆண்டில் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் (Berlin International Film Festival 2024) திரையிடப்பட்டதிலிருந்து இந்த படம் பல சர்வதேச விருதுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |