சில நாட்கள் முன்னர் பிறந்தநாள் கொண்டாட்டம்: கனடாவில் இலங்கையர் படுகொலையில் வெளிவரும் புதிய தகவல்
கனடாவின் ஒட்டாவா பகுதியில் இலங்கையர் குடும்பம் ஒன்று கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
அந்த இளைஞரின் பிறந்தநாள்
இலங்கையை சேர்ந்த ஒரே குடும்பத்து 6 பேர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தில், கைதான இளைஞரும் இலங்கையர் என அடையாளம் காணப்பட்ட நிலையில், சில நாட்கள் முன்னர் தான் அந்த இளைஞரின் 19வது பிறந்தநாளை அந்த குடும்பத்தினர் கொண்டாடியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் காயங்களுடன் தப்பிய தனுஷ்க விக்கிரமசிங்க (தர்ஷனியின் கணவர்) கடும் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், கொலைக்கு தூண்டும் வகையில் எந்த சம்பவமும் அந்த இளைஞருடன் ஏற்படவில்லை என்றும் தனுஷ்க விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை இரவு நடந்த இந்த கொடூர தாக்குதலில் 35 வயதான தர்ஷனி ஏகன்யாகே என்பவருடன் அவரது 4 பிள்ளைகளும் உறவினர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் மாணவரான 19 வயது Febrio De-Zoysa கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்கொலை எண்ணத்துடன்
குறித்த இளைஞரும் அந்த குடும்பத்துடனே தங்கி வந்துள்ளார். அந்த இளைஞர் மீது 6 முதல்நிலை கொலை வழக்குகளும் ஒரு கொலை முயற்சி வழக்கும் பதியப்பட்டுள்ளது.
அனைவரும் இலங்கையர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தர்ஷனியின் 2 மாத குழந்தை மட்டும் கனடாவில் பிறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், சுமார் 2 மாதங்கள் முன்னர் தான், Febrio De-Zoysa அந்த குடும்பத்தினருடன் தங்கும் பொருட்டு இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, தனுஷ்க விக்கிரமசிங்க இலங்கை சென்ற போது Febrio De-Zoysa-வின் பெற்றோரை சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தற்கொலை எண்ணத்துடன் Febrio De-Zoysa இருந்ததாகவும், பாடசாலையில் அந்த இளைஞருக்கு சில பிரச்சனைகள் இருந்ததாகவும் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |