கொடூர சிறைச்சாலை கலவரம்: 100-க்கும் மேற்பட்ட கைதிகள் கொலை! பிரபல தென் அமெரிக்க நாட்டில் பரபரப்பு சம்பவம்
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறை ஒன்றில் நடந்த கலவரத்தில் பலியான கைதிகளின் எண்ணிக்கை 116-ஆக உயர்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை ஈக்வடாரில் உள்ள லிட்டரல் பெனிடென்ஷியரியில் உள்ள சிறைச்சலையில் நடந்த இந்த கொடூர கலவரத்தில்,ஆரம்பத்தில் 30 உயிரிழப்புகள் மட்டுமே கணக்கிடப்பட்டது.
ஆனால், தென் அமெரிக்க நாட்டின் அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், கைதிகளின் இறப்பு எண்ணிக்கையை 116-ஆக உயர்ந்துள்ளதாக புதுப்பித்துள்ளனர். அதில் 5 பேரது தலை துண்டிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த மோதலில் 52 பேர் படுகாயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளுக்கு பொறுப்பான ஈக்வடார் அரசு நிறுவனமான National Service for Comprehensive Attention to Adults Deprived of Liberty and Adolescent Offenders (SNAI), அதன் ட்விட்டரில், “@SNAI_Ec அறிக்கையில், செவ்வாய்க்கிழமை நடந்த சம்பவத்தில், இதுவரை 100-க்கும் மேற்பட்ட இறந்த கைதிகள் மற்றும் 52 காயமடைந்தவர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொடிய சிறை கலவரத்திற்குப் பிறகு, ஈக்வடார் ஜனாதிபதி கில்லர்மோ லாசோ (Guillermo Lasso) இதுபோன்ற கலவரங்களைத் தவிர்ப்பதற்காக நாட்டின் சிறை அமைப்பு முழுவதும் 60 நாட்கள் அவசரகால நிலையை அறிவித்தார்.
இந்த ஆண்டு ஈக்வடாரில் நடந்த இரண்டாவது கொடிய சிறை கலவரம் இதுவாகும். இந்நிலையில், ஈக்வடார் தேசிய காவல்துறை மற்றும் ஈக்வடார் வழக்கறிஞர் அலுவலகம் உள்ளிட்ட ஏஜென்சிகள் இந்த தாக்குதல்களை விசாரித்துவருகின்றன.
முன்னதாக 2020 பிப்ரவரியில், 4 சிறைச்சாலைகளில் நடத்த கலவரத்தில் மொத்தம் 79 கைதிகள் உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பிப்ரவரி கலவரத்தில் பொலிஸ் அதிகாரிகளும் காயமடைந்தனர்.