ட்ரோன் தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு - சூடானில் தொடரும் சோகம்
சூடானில் ட்ரோன் தாக்குதலால் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
சூடான் போர்
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஏப்ரலில், சூடான் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே உள்நாட்டு போர் தொடங்கியது.

முதலில் தலைநகர் கார்ட்டூமில் தொடங்கிய இந்த மோதல், விரைவில் நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியது. இந்த போரினால் தற்போது வரை, குறைந்தபட்சம் 50,000க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின்படி, தற்போது சுமார் 13.6 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 20 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு சுகாதார உதவியும், உணவு தேவைப்படுகிறது.
தற்போது இரு தரப்பினரும் தாக்குதலுக்கு ட்ரோன்களை பயன்படுத்துவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையர் (UNHCHR) வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

1,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழப்பு
இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையிலான 5 மாதங்களிலே ட்ரோன் தாக்குதல்களால் 1,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதை தனது அலுவலகம் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன்களை, மருத்துவமனைகள், அணைகள், பள்ளிகள், சந்தைகள் மற்றும் இடம்பெயர்ந்தோர் முகாம்கள் உள்ளிட்ட பொதுமக்களின் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த போரானது, சூடானை உலகின் மிக மோசமான மனிதாபிமான மற்றும் இடம்பெயர்வு நெருக்கடி நிலைக்கு மாற்றியுள்ளது என ஐ.நா தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |